இலங்கைக்கு காங். கூட்டணி கட்சியினர் மட்டுமே செல்வது சந்தேகத்தை அளிக்கிறது: பழ.நெடுமாறன்

nedumaranஇலங்கை தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாமை ஆய்வு செய்ய காங்கிரஸ் கூட்டணி கட்சியின் எம்.பி.க்கள் மட்டுமே செல்வது சந்தேகத்தை அளிக்கிறது” என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இதுகுறித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.

இலங்கையில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை நேரில் சென்று ஆய்வு செய்ய இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று செல்வதற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் அந்த குழுவில் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமே இடம்பெற்றிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பாராளுமன்ற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஒருவர் கூட அந்தக் குழுவில் சேர்க்கப்படாதது ஆழமான சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இலங்கையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு 3 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாகி வருவதற்கு சிங்கள அரசு மட்டுமல்ல அதனுடன் இணைந்து செயல்பட்ட இந்திய அரசும் காரணமாகும்.

இந்த நிலையில் சிங்கள அரசின் அட்டூழியங்களை மூடி மறைக்க உதவுவதற்காகவே காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்களை மட்டுமே கொண்ட குழு செல்கிறது என்ற ஐயம் வலுப்படுகிறது.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அத்தனை எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் உள்ளடக்கிய குழு சென்றால் ஒழிய உண்மைகளை ஒருபோதும் கண்டறிய முடியாது என்று கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.