இந்தியா-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சி நிறைவு

navy1இந்தியா-இலங்கை நாடுகளின் கடற்படைகளிடையே நடைபெற்ற கூட்டுப் பயிற்சி 2009 அக்டோபர் 8 ஆம் தேதி முடிவடைந்தது. இருதரப்பு உறவுகள் மற்றும் கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்தும்விதமாக இந்தப் பயிற்சி நடைபெற்றதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபட்ச உத்தரவின்படி இலங்கை கடற்படை வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க மற்றும் இந்திய கடற்படை அட்மிரல் நிர்மல் வர்மா ஆகியோர் இணைந்து இப்பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இப்பயிற்சியில் இரு இந்திய போர்க்கப்பல்கள் ஐஎன்எஸ் ஷார்துல் மற்றும் வருணா ஆகியவையும், இலங்கை கப்பல்கள் சயூரா மற்றும் சமுத்ரா ஆகியவையும் ஈடுபடுத்தப்பட்டன.

கேடக்ஸ் 2009 எனப் பெயரிடப்பட்ட இந்தப் பயிற்சியில் இலங்கை கடற்படை அகாதமியின் 100 பயிற்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர். அக்டோபர் 6 ஆம் தேதி இலங்கையின் மேற்குப்பகுதி நீர்ப்பரப்பில் இப்பயிற்சிகள் துவங்கின. இந்தப் பயிற்சி நடவடிக்கைகளில் கடற் பிரயாணம், தீத்தடுப்பு மற்றும் சேதத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மர்மப் படகுகளைசிறப்புப் படகணியின் சிறிய படகுகள் மூலம் தேடுதல் போன்ற பல்வேறு செயல்முறைகள் செய்துகாட்டப்பட்டன.

இலங்கை கடற்படைக் கப்பல்கள் சயூரா மற்றும் சமுத்ரா ஆகியவைகளின் மீது இந்திய ஹெலிகாப்டர்களைப்பயன்படுத்தி நடத்தப்பட்ட ஹலோ ஊப்ஸ் பயிற்சி நடவடிக்கைகள்தான் இரு கடற்படைகளும் மேற்கொண்ட பயிற்சிகளில் முக்கியமானதாகும்.

இந்தப் பயிற்சி நடவடிக்கை இலங்கை பயிற்சி அதிகாரிகளுக்கு இந்தியக் கடற்படைக் கப்பல்களிலும், இலங்கைக் கப்பல்களிலும் பயிற்சி பெற ஒரு வாய்ப்பை வழங்கியது. மேலும் இந்திய கடற்படையினருக்கு இலங்கை ராணுவத்தின் முப்படை பயிற்சி நிறுவனங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும், இலங்கையில் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிடவும் வாய்ப்புகளை வழங்கியது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.