ஹிலாரியை விமர்சித்த பிரதமர் ரட்னசிறி தொடர்பில் அமெரிக்கா இலங்கையிடம் விளக்கம் கோரியுள்ளது

usa-flag-photojpgஅண்மையில் இலங்கைப் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க வெளியிட்ட கருத்து தொடர்பில் அமெரிக்கா கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
 
அரச வானொலிச் சேவையொன்றுக்கு அளித்த செவ்வியில், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்ரன் ஆகியோரை பிரதமர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

மொனிக்கா லிவின்ஸ்கியின் விவகாரத்தை மறந்துவிட்டு ஹிலரி இலங்கை மீது குற்றம் சுமத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை அழைத்து இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்கா விளக்கம் கோரியுள்ளது.
 
பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் நிலைப்பாடு இலங்கையின் உத்தியோகபூர்வ நிலைப்பாடா என்பதனை அறிந்து கொள்ள வேண்டும் என மத்திய, தென் கிழக்காசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் தெரிவித்துள்ளார்.
 
ஹிலரி கிளின்ரன் தனது வீட்டுப் பிரச்சினையை முடித்துக் கொண்டு உலகப் பிரச்சினைகளை பற்றிப் பேச வேண்டும், கண்ணாடி வீட்டிலிருந்துக் கொண்டு கல் எறியக் கூடாது என பிரதமர் தேசிய வானொலிச் சேவைக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.