சிங்கள குடியேற்றம் இராணுவதளம் அமைப்பதை தடுத்து நிறுத்த இந்திய குழுவிடம் கோரிக்கை

sureshதமிழர் பகுதிகளான முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள குடியேற்றம், இராணுவத்தளங்கள் அமைப்பதை தடுத்துநிறுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திய பாராளுமன்ற குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்று சனிக்கிழமை இரவு ‘இந்திய’ இல்லத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இந்திய பாராளுமன்ற குழுவினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பினையடுத்து கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

முகாமில் உள்ள மக்கள் தொடர்ந்து மிருகங்களை போல் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். பருவ மழை காலம் ஆரம்பமாகவுள்ளதால் இந்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு இலங்கை அரசு மேற்கொண்டுவரும் அக்கரையினை இந்த மக்கள் தொடர்பில் காட்டுவதில்லை.

தற்போது முகாமில் உள்ள மக்கள் பெரும் நீர் பற்றாக்குறையினை எதிர்நோக்கியுள்ளனர்.குடிப்பதற்கே முன்று நாளைக்கு ஒரு தடவையே நீர் வழங்கப்படுகின்றது.ஏனைய தேவைகளுக்கு நீர் இன்றி இந்த மக்கள் கடும் கஸ்டங்களை எதிர் நோக்கியுள்ளனர்.இன்னும் சிறிது காலத்தில் இந்த நிலை மோசமாகக்கூடிய நிலையே காணப்படுகின்றது.

இந்த மக்கள் உடனடியாக மீளகுடியமர்த்தப்படவேண்டும். விசாரணை முடியும்வரை குடியமர்த்த முடியாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.விசாரணை முடிந்த ஒரு இலட்சம் பேர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களையாவது மீள குடியமர்த்தவேண்டும் அல்லது அவர்களை திறந்தவெளி அகதிமுகாமில் தங்க வைக்கவேண்டும்.

அத்தோடு முல்லைத்தீவு,கிளிநொச்சி மாவட்டங்களில் சிங்கள குடியேற்றங்களை செய்யவும் பாரிய இராணுவத்தளங்கள் அமைப்பதற்கும் சிங்கள அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது இவ்வற்றினை தடுத்து நிறுத்த இந்திய பாராளுமன்றகுழு உடனடி நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையின் பல பாகங்களுக்கும் விஜயம் செய்யும் இந்திய பாராளுமன்ற குழு வடக்கில் தமிழர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள சகல முகாம்களையும் பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்திய பாராளுமன்ற குழுவினர் நாடு திரும்பு முன்னர் மீண்டும் ஒருமுறை தம்மை சந்திக்க அனுமதிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.