தமிழீழ தேசத்தில் இருந்து எழப் போகும் எரிமலைக் குமுறலை இலங்கையால் இனி தாங்க முடியாது

eelathamilarஈழத் தமிழர்கள் கொதித்து போயுள்ளனர். அவர்களது எரிமலை குமுறலை அணைக்க முடியாது என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வன்னி வதை முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று மாலை ஈழ தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தின் போது அமெரிக்க மருத்துவர் எலின் ஸாண்டரின் ஈழம் குறித்து பேச்சு அடங்கிய சிடி மேடையில் ஒலிபரப்பினர். அதற்கு போலீஸார் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அங்கு லேசான பதட்டம் நிலவியது. இருப்பினும் போலீஸ் மிரட்டலையும் மீறி அந்த சிடி ஒலிபரப்பப்பட்டது.

கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில்,

ஈழத் தமிழர்கள் தனலாக உள்ளனர். அவர்களுடைய எரிமலை குமுறலை அணைக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்கு இடமில்லை என்று ராஜபக்சே சொல்லிவிட்டார். பின்பு எதற்காக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு செல்கிறார்கள்.

பிரபாகரன் ஆவி கூட அதிகாரம் செலுத்த முடியாது என்று திமிராக ராஜபக்சே பேசுகிறார். முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுவிக்கப்பட்டு அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.

தமிழ் ஈழம் ஒன்றுதான் சரியான தீர்வாக இருக்கமுடியும். பிரபாகரன் அழியவில்லை. உரிய நேரத்தில் வருவார். பிரபாகரன் தலைமையில் போராடுவார்கள். தமிழீழம் மலர வேண்டும். தமிழீழத்தை தொடர்ந்து ஆதரிப்போம் என்றார் வைகோ.

ராமதாஸ் பேசுகையில்,

முகாம்களில் இருக்கும் தமிழர்களை பார்வையிடுவதற்காக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் குழு சென்றுள்ளது. இவர்கள் இலங்கையில் இருக்கும் 30 முகாம்களையும் சென்று பார்க்கப்போகிறார்களா? என்றால் அதுதான் இல்லை. ஒரே ஒரு முகாமை தான் இவர்களுக்கு காட்டப் போகிறார்கள்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், தனது கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் உறுப்பினர்களும் அனுப்பி இருப்பதாக கூறி இருக்கிறார். இது தனிப்பட்ட பயணம் தான் என்றும் கூறியுள்ளார். ஆகவே, என்ன நடக்கப் போகிறது என்பது எல்லாம் தெரிந்தது தான்.

 உண்மையை மறைத்துவிடுவார்கள்…

இலங்கை அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் நாங்கள் இறக்கப் போகிறோம் எங்களை விடுவியுங்கள் என்று அவர்களை பார்க்க சென்றவர்களிடம் கூறியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் தற்போது சென்றுள்ளவர்கள் நம்மிடம் சொல்ல மாட்டார்கள். பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்கள் போயிருந்தால் அந்த குரல்களை பதிவு செய்து சொல்வார்கள்.

ராஜபக்சேவை விட மாட்டார்கள்…

முன்பைவிட இப்போது ஈழத்தமிழர்கள் வெகுண்டு எழுந்துள்ளார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சேவை பழிவாங்காமல் விடமாட்டோம் என்ற நிலையில் உள்ளனர். தமிழ் ஈழம் மலர்வது தான் ஒரே வழி. இதை நோக்கி தாய் தமிழர்களுடைய பயணம் இருக்க வேண்டும்.

நிச்சயமாக தமிழ் ஈழம் மலரத்தான் போகிறது. இலங்கை தமிழர்களுக்காக போராட்டம் இல்லையா என்று கேட்கிறார்கள். அந்தவகையில்தான் தொடர் முழக்க போராட்டம் செய்தோம்.

இதேபோல் தொடர்ந்து நம்முடைய பயணம் இருக்கும். இதை பற்றி இளைஞர்களுக்கு எடுத்துக் கூறுவோம் என்றார் ராமதாஸ்.

பயப்படுகிறார் ராஜபக்சே…

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன் பேசுகையில்,

தமிழர்கள் மீண்டும் எழுச்சி பெற்றால் என்ன செய்வது என்ற அச்சம் ராஜபக்சேவிடம் உள்ளது. பிரபாகரன் தலைமையில் மீண்டும் போராட்டம் வந்தால் என்ன செய்வது என்ற பயத்தில் உள்ளார்.

முள்வேலி முகாம்களுக்கு அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்கக் கோரி வரும் 27,28,29 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பிரசார பயணம் செய்ய இருக்கிறோம். இதற்கு மற்ற அமைப்புகள் ஆதரவுதர வேண்டும் என்று கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.