யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சரமாரி கேள்வி – டி.ஆர்.பாலு திணறல்

jaffindmpராஜீவ் காந்தி படுகொலையைக் காரணமாக வைத்து பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டனர். இன்னும் எத்தனை ஆயிரம் தமிழர்கள் கொல்லப்படவுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கேட்ட கேள்விக்கு சரியாக பதிலளிக்க முடியாமல் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு திணறினாராம்.

போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் நிலை தொடர்பாக நேரில் ஆராய்வதற்காக இலங்கை சென்றுள்ள திமுக கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் குழு இன்று காலை யாழ்ப்பாணத்திற்குச் சென்றது.

இன்று காலை யாழ்ப்பாணம் சென்ற டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் அங்குள்ள யாழ் பல்கலைக்கழகத்திற்குச் சென்றனர். அங்குள்ள ஈழத் தந்தை செல்வாவின் சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் இலங்கை படையினரால் முன்பு அழிக்கப்பட்ட யாழ்ப்பாணம் நூலகத்திற்குச் சென்று பார்வையிட்டனர். மேலும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களையும் சந்தித்துப் பேசினர். அவர்களது குறைகளையும் கேட்டறிந்தனர்.

இடம் பெயர்ந்தோர் முகாம்களில் முன்பு தங்க வைக்கப்பட்டு தற்போது யாழ்ப்பாணம் திரும்பியுள்ள தமிழர்களையும் அவர்கள் சந்தித்துப் பேசினர்.

யாழ்ப்பாணம் நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் அழைத்து வரப்பட்டிருந்த மாணவர்கள் உள்ளிட்டோருடன் தமிழக குழுவினர் உரையாடினர்.

அரசியல் தீர்வு அவசியம்…

டி.ஆர்.பாலு அப்போது பேசுகையில், 25 ஆண்டு காலத்திற்கும் மேலாக நீடித்து வரும் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

இலங்கைத் தமிழர்களுக்கும், இந்தியத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு மிக உறுதியானது. இந்தியா, இலங்கை உறவுகளிலும் இது பிரதிபலிக்கிறது.

இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள தமிழ் மக்கள் விரைவில் மறு குடியமர்த்தப்பட வேண்டும் என்றார் அவர்.

கண்ணீர் சிந்தக் கூடாது – கனிமொழி

கனிமொழி பேசுகையில், இனியும் தமிழ் மக்கள் கண்ணீர் சிந்தக் கூடாது. இடம் பெயர்ந்து வந்துள்ள மக்கள், அவர்களது குடும்பத்தினருடன் இணைய அனுமதிக்கப்பட வேண்டும். இலங்கையில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் என்றார்.

இந்த சந்திப்பின்போது சமூக நலத்துறை அமைச்சரும், விடுதலைப் புலிகள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் உயிர் தப்பியவருமான டக்ளஸ் தேவானந்தாவும் உடன் இருந்தார்.

மாணவர்கள் சரமாரி கேள்வி…

இந்தக் கலந்துரையாடலின்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் சரமாரியாக கேள்விகளைக் கேட்டனராம்.

ஒரு மாணவர் எழுந்து, ராஜீவ் காந்தியின் கொலையை காரணமாக வைத்து பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டனர். இன்னும் எத்தனை ஆயிரம் தமிழர்களைக் கொல்லப் போகிறார்கள் என்று கேட்டபோது திமுக -காங்கிரஸ் எம்.பிக்கள் குழு அமைதியாக இருந்ததாம்.

மறுகுடியமர்த்தல் நடவடிக்கைகள் குறித்த பல கேள்விகளுக்கு டி.ஆர்.பாலு சரிவர பதில் தர முடியாமல் தவித்ததாகவும் கூறப்படுகிறது.

திருமாவளவன் பேசவில்லை…

இந்த சந்திப்பின்போது டி.ஆர்.பாலுவும், கனிமொழியும் மட்டுமே பேசியதாக தெரிகிறது. தொல். திருமாவளவன் உள்ளிட்ட மற்றவர்கள் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.

வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறீயையும் திமுக- காங்கிரஸ் எம்.பிக்கள் குழு சந்தித்துப் பேசியது.

அதன் பின்னர் திமுக -காங்கிரஸ்  எம்.பிக்கள் குழு மானிக் பார்ம் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஆலோசனை…

முன்னதாக இக்குழு நேற்று கொழும்பு சென்றடைந்ததும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்துப் பேசியது. சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. அப்போது இடம் பெயர்ந்த தமிழ் மக்களின் நிலை குறித்து திமுக கூட்டணிக் குழுவிடம், தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள் எடுத்துரைத்தனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் சம்பந்தன், எம்.பிக்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், என்.சிறீகாந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

போரினால் இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டதாகத் தெரிவித்த சம்பந்தன், தடுப்பு முகாமில் உள்ள மக்கள் விரைவில் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், தண்ணிவெடிகளை அகற்றுவதுதான் இந்த மக்களின் மறு குடியேற்றத்துக்குப் பிரதான தடையாக இருப்பதாக அரசு தெரிவிக்கின்ற போதிலும், கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் எங்களுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்பதை எங்களைச் சந்தித்த எம்.பிக்கள் குழுவிடம் தெரிவித்தோம்.

இதில் தேவையற்ற தாமதம் ஏற்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக பெறக்கூடிய உதவிகளைப் பெற்று அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் அந்தப் பணியை மேலும் துரிதமாக மேற்கொண்டிருக்க முடியும்.

வேண்டும் என்றே தாமதம்…

மேலும், சில, பல காரணங்களுக்காக சில மாவட்டங்களில் இந்தப் பணியை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் அரசு செயற்படுவதாக நாம் சந்தேகிக்கப்பட வேண்டியிருக்கின்றது.

கண்ணிவெடிகளையும், இடம்பெயர்ந்த மக்களுடன் விடுதலைப் புலிகள்  அமைப்பின் உறுப்பினர்கள் கலந்திருப்பார்கள் என்பதையும் காரணம் காட்டி மறு குடியேற்றத்தைக் காலம் தாழ்த்தாமல் அதனை அரசு துரிதமாக முன்னெடுக்க வேண்டும்.

மக்கள் தங்களின் இடங்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். தற்போதைய நிலைமையில் இங்குள்ள மக்கள் யார் என்பது குறித்து அரசு சரியாக அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவே எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கின்றது.

எனவே மக்களை தமது இடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கு அரசு அனுமதிக்க வேண்டும். யாராவது இவ்விதம் திரும்பிச் செல்ல முடியாதிருந்தால் அவர்களை தமது உறவினர்கள் நண்பர்களுடன் தங்கியிருப்பதற்கான வசதிகள் செய்யப்பட வேண்டும்.

இடம்பெயர்ந்த இந்த மக்களை இவ்விதம் அடக்கி, ஒடுக்கி ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலைமையில் ஒரு மாற்றம் வரவேண்டும் என்பதை நாங்கள் தெளிவாக இந்தியக் குழுவினருக்கு விளக்கிக் கூறியிருக்கின்றோம்.

போர் முடிவடைந்த உடனே கொழும்பு  க்கு வந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளரும், பாதுகாப்பு  ஆலோசகரும் இடம்பெயர்ந்த மக்கள் 180 நாட்களுக்குள் மறு குடியமர்த்தப்படுவார் என்ற வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டார்கள்.

ஆனால் இதில் 130 நாட்கள் சென்றுவிட்டது. இன்னும் 50 நாட்கள்தான் இருக்கின்றதன. எமது கணிப்பின்படி இக்காலப் பகுதியில் இந்த முகாமில் இருந்து சுமார் 25 ஆயிரம் மக்கள்தான் வெளியே வந்திருக்கின்றார்கள்.

இது போதிய முன்னேற்றம் அல்ல. அவர்கள் இந்தியாவுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே, அதனை நிறைவேற்றச் செய்வதற்கு இந்தியா தனது அரசியல் செல்வாக்கைப் பிரயோகிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம் என்றார் சம்பந்தன்.

கிழக்கு மாகாண பயணம் ரத்து..

இந்த நிலையில் நேற்று கிழக்கு மாகாணத்திற்கு திமுக கூட்டணிக் குழுவினர் போவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டு விட்டது.

கொழும்பு வந்தடைந்தவுடன், திமுக கூட்டணிக் குழுவினர் கிழக்கு மாகாணத்திற்கு நேரடியாக பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்திருந்தது. இருப்பினும் அது திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரின் பின்னர் மறு குடியமர்த்தப்பட்ட பகுதியான வாகரைக்கு திமுக கூட்டணிக் குழுவினர் செல்லவிருந்தனர். மேலும் இந்திய உதவியுடன் தற்போது பொலநறுவைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டுள்ள ரயில் மற்றும் பஸ் சேவையை பார்வையிடவும் திட்டமிட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாநகர சபை மாலையில் இவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மேலும், இலங்கைப் படையினருடன் இணைந்து இயங்கி வரும், கருணாவின் தலைமையில் முன்பு இயங்கி வந்தவரும், தற்போதைய கிழக்கு மாகாண முதல்வருமான பிள்ளையானையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இதை பிள்ளையானும் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த குழுவின் தலைவரான முன்னாள் திமுக அமைச்சர் டி.ஆர்.பாலு கூறுகையில், இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று தெரிவித்தார்.

முன்னதாக நேற்று கொழும்பு சென்றடைந்த திமுக கூட்டணிக் குழுவினரை, இலங்கை தமிழ் அமைச்சரும், மலையகத் தமிழர் தலைவருமான ஆறுமுகம் தொண்டைமான் விமான நிலையத்தில் வரவேற்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.