அனைவரும் இணைந்து தமிழர்களை எப்பிடி காப்பாற்றலாம் என்று ஆலோசிக்கலாம் – கருணாநிதி

karu1இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றும் வழி பற்றி தமிழக எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஏன் அனுப்பவில்லை என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமேயானால், பிரதமரைச் சந்தித்து, அனுமதி பெற்று, சென்று பார்க்க வேண்டியதுதானே?

எம்.பி.க்கள் குழுவுக்கு மு.க. ஸ்டாலின் தலைமை வகிக்கப் போவதாக ஜெயலலிதா அறிக்கை விட்டார். அரசின் சார்பிலோ, கட்சியின் சார்பிலோ அல்லது நானோஅறிவிக்காத நிலையில், ஒரு பத்திரிகை செய்தியை வைத்துக் கொண்டு அறிக்கை விட்டதன் மூலம், அரசியலில் ஜெயலலிதா எப்படி அவசரப்படுகிறார் என்பது புரிகிறது.

இந்தக் குழு இலங்கை சென்று வந்த பின் யாரிடம் அறிக்கை அளிக்கும் என ஜெயலலிதா கேட்டிருக்கிறார். எங்கள் கூட்டணியின் சார்பில், எங்கள் கட்சிகளின் செலவில் சென்றுள்ள குழு, எங்களிடம்தான் அறிக்கை அளிக்கும்.
 
இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை களைய எப்படியோ முயற்சி செய்து, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதனை கேலிக் கூத்தான நாடகம் என்கிறார் ஜெயலலிதா.
 
இதன் மூலம் இலங்கைத் தமிழர்களிடம் அவருக்குள்ள அக்கறை நமக்கு தெரிகிறது. நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளின் குழுவை அனுப்பாவிட்டால், உண்மைகளைக் கண்டறிய முடியாது என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் கூறியுள்ளனர்.
 
அந்த இயக்கத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் குழு பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்தித்து, கோரிக்கை வைப்பதை யார் தடுத்தார்கள்? அதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல், நாம் செய்கின்ற முயற்சிகளை கண்துடைப்பு நாடகம் என்று விமர்சனம் செய்வது சரியா?
 
ராஜபக்ஷவின் விருந்தினர்களாக எம்.பி.க்கள் குழு சென்றிருக்கக் கூடாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். ராஜபட்ச விருந்தினராகச் செல்லவில்லை. அந்த நாட்டின் அதிபர் என்ற முறையில், அவருடைய அனுமதியோடு குழு சென்றுள்ளது என்பதுதான் உண்மையாகும். இலங்கைத் தமிழர்கள் மீது எல்லோருக்கும் அக்கறை உண்டு.
 
அவர்களுக்கு எந்த வகையில் உதவிட முடியுமென்று பார்க்க வேண்டுமே தவிர, இங்கேயுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால் இன்னல் களைந்து விடுமா? எனவே, இங்குள்ள எதிர்க்கட்சிகளுக்கு இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், எதற்கெடுத்தாலும் எங்கள் மீது பாய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
 
இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற என்ன வழி என்பதிலே கவனத்தைத் திருப்பிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இப்படி தமிழ்நாட்டில் நமக்குள்ளே மோதிக் கொண்டுதானே, இலங்கைவாழ் தமிழர்களிடையேயும் சகோதர யுத்தத்திற்கு வழிவகுத்து, இன்றைக்கு இந்த அவல நிலைக்கு ஆளாகியிருக்கிறோம் என்பதை இனியாவது சிந்திக்க வேண்டாமா என கருணாநிதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.