கடும் குரலில் பாலு கண்டிப்பு – அழுத வவுனியா பெண் கலெக்டர்

tn_12-balu200வவுனியா சென்ற திமுக – காங்கிரஸ் எம்.பிக்கள் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு கடும் குரலில் கண்டித்துப் பேசியதால் வவுனியா பெண் கலெக்டர் பி.எஸ்.எம்.சார்லஸ் அழுது விட்டார். இதையடுத்து அருகில் இருந்த கனிமொழி, டி.ஆர்.பாலுவை தடுத்து அமைதிப்படுத்தினார். பின்னர் பாலு தவிர அனைவரும் பெண் கலெக்டரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.

திமுக – காங்கிரஸ் எம்.பிக்கள் குழு இலங்கை சென்றுள்ளது. தமிழர் பகுதிகளின் நிலை குறித்து அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். நேற்று காலை யாழ்ப்பாணம் சென்ற அக்குழுவினர் மாலையில் வவுனியா சென்றனர்.

அப்போது வவுனியா மாவட்ட பெண் கலெக்டர் பி.எஸ்.எம்.சார்லஸ், குழுவினருக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அப்போது அவரது செயல்பாட்டால் கோபமடைந்த டி.ஆர்.பாலு, தனக்கே உரித்தான கடுமையான குரலில், நீங்கள் யார் எங்களது விஷயங்களில் தலையிட, உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று கண்டிப்புடன் கேட்டாராம்.

இதுகுறித்து பி.எஸ்.எம்.சார்லஸ் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், குழுவினரின் நடவடிக்கையில் தலையிட நீங்கள் யார், உங்களது தகுதி என்ன என்று கடுமையான குரலில் கேட்டார் டி.ஆர்.பாலு.

அவரது கோபமான பேச்சால் நான் அழுது விட்டேன். இத்தனைக்கும் நான், தமிழக குழுவினரின் விருப்பத்திற்கேற்பதான் ஏற்பாடுகளைச் செய்திருந்தேன். ஆனால் அவர் கண்டிப்பான குரலில் பேசியதால் நான் மனம் உடைந்து அழுது விட்டேன்.

இதையடுத்து அருகில் இருந்த கனிமொழி தலையிட்டு பாலுவை அமைதிப்படுத்தினார். அவரும், மற்றவர்களும் என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். ஆனால் நான் பேசியதை மறந்து விடுங்கள் என்று மட்டுமே பாலு என்னிடம் கூறினார் என்றார் சார்லஸ்.

இந்த சம்பவம் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.