புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட குழுவினர் கோதாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரிலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர்?

sla-Defence-Secretaryராணுவத்தினரிடம் சரணடையவதற்கு வந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட குழுவினரை மே மாதம் 18ம் திகதி பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரிலேயே சுட்டுக்கொன்றதாக இராணுவத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தகவல்களுக்கமைய, மே 18ம் திகதி அதிகாலை 58வது படைப்பிரிவின் அந்நாள் கட்டளைத் தளபதியாக இருந்த பிரிகேடியர் ஸிவிந்திர சில்வாவை தொலைபேசியில் தொடர்கொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, போர்க் கைதிகளை வைத்துக்கொள்வது அரசாங்கத்திற்கு தேவையற்றவிடயமெனவும் வெள்ளைக் கொடியுடன் அல்லது கொடியின்றி வரும் எந்தவொரு தரப்பினரையும் தராதரம் பாராது சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.
 
இதனடிப்படையில் 18ம் திகதி பிற்பகல் பரந்தன் ‐ முல்லைத்தீவு வழியாக இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு வெள்ளைக் கொடியுடன் வந்த நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஸ் உள்ளிட்ட குழுவினர் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மேலும் சர்வதேச அமைப்பொன்றும், வெளிநாட்டு தூதரகமொன்றும் இணைப்புப் பணிகளை மேற்கொண்டு பாதுகாப்புச் செயலாளர், வெளிநாட்டமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு அறிவித்த பின்னரே புலித்தேவன், நடேசன் உள்ளிட்ட குழுவினர் இராணுவத்தினரிடம் சரணடையச் சென்றுள்ளனர்.
 
யுத்த நடவடிக்கைகளுக்குரிய ஆயுதங்கள் குறித்து ஆராயும் நோக்கில் சீனா சென்றிருந்த அந்நாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, 18ம் திகதி மதியமே நாடு திரும்பியிருந்ததாகவும் இராணுவத் தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.