லண்டன் பேரணிகளுக்கு புலம்பெயர் தமிழீழ தேசம் ஏன் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்

btf_20090529புலம் பெயர் தமிழர்களின் போராட்டத்தில் லண்டன் பேரணிகள் மிகவும் காத்திரமான பங்கினை வகிக்கின்றன. இப்பேரணிகள் பிரித்தானிய அரசியலில் சில மாற்றங்களிற்கான அழுத்தத்தை கொடுத்தது என ஆய்வாளர்கள் நம்புகின்றார்கள்.

பிரித்தானியாவில் கடந்த சில வருடங்களாக பிரித்தானிய தமிழர் பேரவை, பிரித்தானிய அரசின் மனத்தினை வென்றெடுக்கும் வேலைத்திட்டத்தில் (லோபி ) ஈடுபட்டு வருகின்றது. இந்த லொபியில் ஜனவரி 31ம் திகதி நடைபெற்ற பேரணியின் பின்னர் மிகவும் காத்திரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

ஜனவரி மாதம் 31ம் திகதி சனிக்கிழமை பேரணி நடைபெற்றது. ஒன்றரை லட்சம் மக்கள் வீதியில் பேரணியாகச் சென்றனர். இதனை உற்று நோக்கிய பிரித்தானிய அரசின் பிரதிநிதிகள் அடுத்த திங்கட்கிழமை பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகளை சந்தித்தார்கள். அதன்போது பேரவையினர் தமிழ் மக்களின் கோரிக்கைகளை அவர்களிடம் எடுத்துரைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து புதன்கிழமை பிரித்தானிய பிரதமருடனான சந்திப்பு நடைபெற்றது. இதன் விளைவாக திரு. டெஸ் பிரவுண் , பிரித்தானிய பிரதமரின் தூதவராக நியமிக்கப்பட்டார்.

அந்நியமனத்தை இலங்கை அரசு நிராகரித்தது. இது பிரித்தானிய – இலங்கை அரசின் நட்புறவில் பெரும் விரிசலுக்கு வித்திட்டது.

அதன் பின்னர் நடைபெற்ற ஏப்பிரல் மாதப் பேரணியில் இரண்டரை லட்சம் மக்கள் கூடினார்கள் அதனைத் தொடர்ந்து பிரித்தானிய வெளியுறவுச் செயலர் தாம் உங்களிற்காக என்ன செய்ய வேண்டுமென தமிழ் மாணவர்களை கேட்டார். அப்போது தமிழர்கள் அவரை இலங்கை சென்று போர் நிறுத்தத்திற்கான அழுத்தத்தை கொடுக்குமாறு கேட்டனர். அவரும் கொழும்பு சென்றார்.

பிரித்தானிய அரசின் முயற்சிகள் தோல்வியில் முடிந்து மக்கள் பாரிய அளவில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மைதான். ஆனாலும் தமிழர்கள் தொடர்ந்தும் போராட வேண்டியவர்களாகவே உள்ளனர்.

உலகமே மெளனம் சாதித்த வேளை பிரித்தானிய அரசின் போக்கில் பல மாற்றத்தை ஏற்படுத்தியதோடு திரு. டேவிட் மிலிபாண்ட் அவர்களை இலங்கை செல்லத் தூண்டியதில் லண்டன் பேரணிகளும் இளையோரின் போராட்டங்களும் முக்கியமான பங்கினை வகிக்கின்றது.

போரின் பின்னரான காலப்பகுதியில் மீண்டும் யூன் மாதம் லண்டனில் மக்கள் பேரணி நடைபெற்றது. அதன் மூலம் இலங்கை அரசின் பல பொய்ப் பிரசாரங்கள் அடிபட்டுப்போனதோடு மீண்டும் தமிழ் மக்களின் அவலத்தையும் அபிலாசைகளையும் உலகிற்கு எடுத்துக்கூறக்கூடியதாக அமைந்தது.

அவ்வாறானதான பேரணியில் தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன. அது இன்று தொழிற்கட்சியில் ஓர் பிரகடனமாக ஆகியுள்ளதையும் குறிப்பிடலாம்.

பிரித்தானிய அரசியல் அரங்கில் இது மிகவும் முக்கியமான காலமாகும். தேர்தல் நெருங்குகின்றது. தமிழ் மக்களின் ஒற்றுமையும் எழுச்சியும் பிரித்தானிய அரசை வென்றெடுக்க பெரிதும் உதவும்.

இவ்வாறான பின்னணியில் அக்டோபர் மாதம் 17ம் திகதி மாபெரும் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முள்வேலியின் பின்னால் நிற்கும் எமது உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதனை வலியுறுத்தி நாம் அனைவரும் பேரணியில் இணைந்து கொள்வோம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.