முகாம்களில் வாழும் தமிழர்களின் விடுதலைக்கு மத்திய அரசின் ஊடாக தமிழக அரசு வலியுறுத்தும்

kaniவன்னியில் அகதிமுகாம்களில் வாழும் தமிழர்களின் விடுதலைக்காக மத்திய அரசாங்கத்தை தமிழக அரசு வலியுறுத்தும். இலங்கை விஜயம் தொடர்பில் எமது அறிக்கையினை தாயகம் திரும்பியதும் நாம் வெளியிடுவோம் என்று தமிழக பாராளுமன்ற குழுவின் உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் பல கட்சிப் பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்போது இலங்கைக்கான விஜயம் தொடர்பில் கேசரிக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது: இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையிலும் தற்போது அகதிமுகாம்களில் வாழும் மக்களின் பிரச்சினை தொடர்பிலும் தமிழக அரசாங்கத்தினால் நேரடியாக தலையிட முடியாத நிலை உள்ளது.

இந்திய மத்திய அரசின் ஊடாகவே அகதிமுகாம்களில் வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் வலியுறுத்தல்களை மேற்கொள்ள முடியும்.

இலங்கை விஜயத்தின் போது வன்னியில் அகதிமுகாம்களை நாம் பார்வையிட்டோம். அகதி முகாம்களில் வாழும் மக்களுடன் நாம் உரையாடினோம். தம்மை முகாம்களில் இருந்து உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோருகின்றனர்.

இவர்களது விடுதலை தொடர்பாக அரசாங்க பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின் போது வலியுறுத்த உள்ளோம். அதேபோன்று தாயகம் திரும்பியதும் தமிழக அரசின் ஊடாக மத்திய அரசாங்கத்தை வலியுறுத்துவோம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.