எம் மக்களை காப்பற்றுக்ங்கள் என்று மகிந்தவிடம் திருமாளவன் கெஞ்சினாராம்

thiru-300வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் முகாம்களுக்கு விஜயம் செய்தபோது அவர்கள் எம்மிடம் மழைக்காலத்துக்கு முன்னர் தங்களை தமது சொந்தப் பிரதேசங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு எம்மிடம் மன்றாடினர். நாம் அவர்களின் மன்றாட்டத்தை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, அகதிகளான மக்களை முகாம்களில் வைத்திருக்க தமக்கு விருப்பம் எதுவும் இல்லையெனத் தெரிவித்ததுடன் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதுடன் அவர்களை துரிதமாக மீள்குடியேற்றயேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய எம். பி. க்களின் குழுவின் முக்கியஸ்தரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.

இதேவேளை முகாம்களின் நிலைமை திருப்திகரமாக இல்லை. கூடாரங்கள் மூன்று மாதகாலத்துக்குக்கூட தாக்குப்பிடிக்கும் நிலையில் இல்லை. அது தொடர்பில் எம்மால் திருப்திகொள்ள முடியாது. அவற்றில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தங்கியிருந்த அவர் நாடு திரும்புவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் கேசரி நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

செவ்வியின் முழு விபரம் வருமாறு கேள்வி: வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் செய்தீர்கள். அந்த மக்கள் உங்களிடம் என்ன கூறினர்?

பதில்: அவர்களுடன் நாங்கள் கலந்துரையாடினோம். அனைத்து முகாம்களுக்கும் விஜயம் செய்தோம். எங்களை உடனடியாக மீள்குடியேற்றம் செய்யுங்கள். நாங்கள் என்ன பாவம் செய்தோம்? என்ன குற்றம் செய்தோம்? ஏன் எங்களை வாட்டுகின்றீர்கள்? மழைக்காலத்துக்கு முன்னர் எங்களை விடுவியுங்கள். நாங்கள் சொந்த இடங்களுக்கு செல்லவேண்டும். எங்களுக்கு கை கால்கள் உள்ளன. அவை எங்களுக்கு போதும்.

எனவே எங்களை மீள்குடியேற்றம் செய்யுங்கள். நாம் உழைத்து சொந்தக் காலில் வாழ்வோம் என்று அகதி மக்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

கேள்வி: ஜனாதிபதியுடனான சந்திப்பில் என்ன விடயங்களை கலந்துரையாடினீர்கள்?

பதில்: அகதி மக்கள் எங்களிடம் கூறியதை நாங்கள் அவரிடம் கூறினோம். அரசாங்கம் எங்களுக்கு எந்த உதவியையும் செய்ய வேண்டியதில்லை. எங்களை வீடுகளுக்கு அனுப்புங்கள். அதுதான் அவர்களின் கோரிக்கை என்பதனை தெரிவித்தோம்.

கேள்வி: அதற்கு ஜனாதிபதியின் பதில் எவ்வாறு அமைந்தது?

பதில்: அந்த மக்களை வைத்துக் கொண்டிருக்க நாங்கள் விரும்பவில்லை. விரைவாக மீள்குடியேற்றவே விரும்புகின்றோம். எனினும் நிலக்கண்ணிவெடிகள் பிரச்சினையாகவுள்ளன.

முகாம்களில் மக்களுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்துக்கு அமைவாக வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். நிலக்கண்ணிவெடிகளை அகற்றியதும் அந்த மக்களை மீள்குடியேற்றிவிடுவோம் என்று ஜனாதிபதி எம்மிடம் தெரிவித்தார்.

கேள்வி: நலன்புரி முகாம்களில் காணப்படுகின்ற வசதிகள் தொடர்பில் இந்திய எம். பி. க்கள் குழு திருப்தி அடைகின்றதா?

பதில்: இல்லை திருப்தியடையவில்லை. யாரும் அவ்வாறு கூறவும் இல்லை. திருப்தியடையவும் இல்லை.
திருப்திகரமாக இருக்கின்றது என்று யாருமே சொல்லவில்லை.

கேள்வி: அப்படியானால் என்ன குறைபாடுகளை பார்க்கின்றீர்கள்?

பதில்: எல்லா குறைபாடுகளும் இருக்கின்றன. கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் அவை மூன்று மாதங்களுக்கும் தாக்குப்பிடிக்காது. சுகாதார பிரச்சினைகள் உள்ளன. ஆனால் 150 டாக்டர்கள் அங்கு பணியாற்றுகின்றனர். அதனையும் நாங்கள் கூறத்தான் வேண்டும்.

மூவாயிரம் கர்ப்பிணி பெண்கள் இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 250 பேரை அனுப்பிவிட்டார்களாம். ஏனையோரை பொறுப்பேற்க யாரும் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

பொறுப்பேற்க யாரும் இருந்தால் விண்ணப்பிக்கும்படி பத்திரிகைகளில் விளம்பரங்களை செய்துள்ளதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை நான் ஜனாதிபதியின் ஆலோசகர் பஷில் ராஜபக்ஷவிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தேன். அதாவது பிரபாகரனின் பெற்றோரை விடுவிக்க முடியும் தானே என்று கேட்டேன். அதற்கு அவர் பதிலளிக்கையில் அப்படியானால் பத்திரிகை விளம்பரத்தின் அடிப்படையில் யாராவது விண்ணப்பித்தால் பசீலிக்க முடியும் என்று கூறினார்.

அத்துடன், பிரபாகரனின் உறவினர் (மாமியார்) தொடர்பிலும் உரையாடினேன். அவர்கள் பாதுகாப்பாகவே இருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது.

கேள்வி: இடம்பெயர்ந்தோர் விவகாரம் தொடர் பில் இந்தியாவில் இருந்த போது உங்களுக்கு ஒரு நிலைப்பாடு இருந்திருக்கும். தற்போது இங்கு வந்து நிலைமைகளை பார்த்த பின்னர் உங்கள் நிலைப்பாடுகளில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா?

பதில்: நாங்கள் அங்கு என்ன கேள்விப்பட்டோமோ அதைத்தான் இங்கு காண்கின்றோம். பெரிய மாற்றங்கள் இல்லை.

கேள்வி: அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் ஏதாவது பேசினீர்களா?

பதில்: நான் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதியுடன் நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பில் பேசினேன். சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டன.

அதனை தனித்து செய்ய முடியாது என்றும் அனைவருடனும் ஆலோசித்தே செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார். அது தன்னுடைய வேலைப்பகுதி என்றும் அதனை தான் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

கேள்வி: உங்களின் அறிக்கை எவ்வாறு அமையப்போகின்றது?

பதில்: அதனை தூதுக்குழுவே தீர்மானிக்க வேண்டும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.