மேற்குலக நாடுகளின் பேராசையால் இலங்கைக்கு பொருளாதாரச் சுமை!

“மேற்குலக நாடுகளின் பேராசை பிடித்த கொள்கைகளால் ஏற்பட்ட பொருளாதாரச் சுமைகளை இலங்கையும் சுமக்க வேண்டியிருக்கிறது” என்று காட்டமாகக் கூறியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.கொழும்பில் நேற்று ஆரம்பமான எட்டாவது ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டைத் தொடக்கிவைத்துப் பேசிய ஜனாதிபதி மஹிந்த, தமது மேற்குலக நாடுகளையும், சர்வதேச நிதி நிறுவனங்களையும் கடுமையாகச் சாடினார்.

mahinda_srilankaமேற்குலகின் ஆதிக்கப் பேராசை பிடித்த நாடுகளால் உருவான சுமைகளை நாங்கள் சுமக்கிறோம்” எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி சர்வதேச நிதியமைப்புகள் சிறிய நாடுகளுக்கு நிபந்தனைகளை விதிக்கின்றமையையும் சாடியுள்ளார்.

இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றி பெருமளவிற்கு இலங்கையின் சொந்த முயற்சியாலேயே கிடைத்தது என்றும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

உலகப் பொருளாதாரம் கடந்த சில தசாப்தங்களாக சந்தித்திராத மிகக் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளமை உட்படப் பல சவால்களை எதிர்கொள்கிறோம்.

 தமது வளர்ச்சிக்காக ஏற்றுமதியை நம்பியிருக்கும் நாடுகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.இந்த நெருக்கடி ஆசிய பிராந்தியத்துக்கு வெளியே உள்ளவர்களால் எம்மீது திணிக்கப்பட்ட ஒன்று. ஏனையவர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகள் காரணமாக எமது பொருளாதாரம் கடும் சவால்களைச் சந்திக்கவேண்டியுள்ளது. இதிலிருந்து மீளும் சுமையை மேற்குலக நாடுகள் பொறுப்பேற்க வேண்டும்.

மேற்குலகின் ஆதிக்க மனோபாவம் உள்ள  பொருளாதாரப் பேராசை கொண்ட  நாடுகளினால் உருவாக்கப்படும் சுமையை நாங்களும் சுமக்கவேண்டியுள்ளது.எமது பிராந்தியத்தில் அதிகளவு பங்களிப்பு செய்யும் சர்வதேச நிதி அமைப்புகள் தமது நிபந்தனைகளால், எம்மீது சுமத்தப்படும் சுமை குறித்துக் கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறான நிபந்தனைகளில் வறுமை ஒழிப்பை பணயக்கைதியாகப் பயன்படுத்தக்கூடாது.
மூன்றாம் உலக நாடுகளை மானியங்களை வழங்க வேண்டாமென வற்புறுத்தும் சர்வதேச நிதியமைப்புகள் மேற்குலகம் இவ்வாறு மானியங்களை வழங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து  கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதேவேளை, இலங்கையைப் பொறுத்தவரை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீளக் குடியமர்த்துவதே எமது முக்கிய கவனத்துக்குரிய விடயமாகவுள்ளது.அநேகமானவர்கள் எதிர்பார்ப்பதை விட இது கடினமான விடயம்.ஜனநாயக அரசொன்றுக்குத் தற்போது உள்ள இடத்திலிருந்து அந்த மக்களை மிக விரைவில் தமது பகுதிகளில் மீள்குடியமர்த்துவதே முக்கியமான விடயம்.எனினும் மீள்குடியேற்றத்தை மிக அவதானமாகவே முன்னெடுக்கிறோம். நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதை மிக அவதானமாக செயற்படுத்த வேண்டியுள்ளது  என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.