இந்தோனேசியா: படகில் தவிக்கும் தமிழ் அகதிகள் பட்டினிப் போரில் குதித்தனர்

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, 300 ஈழத் தமிழர்கள் பட்டினிப் போரில் குதித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து பெருமளவில் பணம் கொடுத்து மலேசியா சென்று அங்கிருந்து பெரிய படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கிட்டத்தட்ட 300 பேர் தப்பிச் சென்றனர். ஆனால் அவர்களை இந்தோனேசிய கடற்படையினர் தடுத்து தற்போது மேற்கு ஜாவா தீவுக்குக் கொண்டு சென்றனர்.

tamils-hunger-strike-200இவர்களை தற்போது படகிலிருந்து இறக்க கடற்படையினர் முயற்சித்து வருகின்றனர். ஆனால் தங்களை அப்புறப்படுத்த முயன்றால், காஸ் சிலிண்டர்களை வெடிக்க வைத்து கூண்டோடு தற்கொலை செய்து கொள்வோம் என தமிழர்கள் கூறி விட்டனர்.

இந்த நிலையில், படகில் உள்ள தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் நிலைமை மோசமாகியுள்ளது.

படகின் மீது வாழ்வா, சாவா, சர்வதேச சமுதாயத்துக்காக பட்டினிப் போர் என்று எழுதி வைத்துள்ளனர். படகில் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தகைள் என அனைவரும் சாப்பிடாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, படகிலிருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும். அவர்களுக்கு தற்காலிகமாக தங்குமிட வசதிகள் செய்து தரப்படும், முறைப்படி புகலிடம் கோரி விண்ணப்பிக்கலாம். அது உரிய வழியில் பரிசீலிக்கப்படும் என இந்தோனேசிய அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பான்டன் மாகாண குடியேற்றப் பிரிவுத் தலைவர் ஹாரி புர்வன்டோ கூறுகையில்,

இருப்பினும் தற்போது குறைவான தங்குமிட வசதியே உள்ளது. படகில் உள்ளவர்கள் அனைவரையும் அங்கு தங்க வைக்கவும் முடியாது. அவர்களை வேறு வேறு பகுதிக்குப் பிரித்து அனுப்ப முயன்றால், அதை அவர்கள் ஏற்பார்களா என்றும் தெரியவில்லை என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஈழத் தமிழர்கள் படகில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.