நாங்கள் உன்னை விட்டு செல்கின்றோம் என்றால் கூட; நீ புலி என்று முத்திரை குத்தும் இலங்கை இனவாதிகள்

பிரித்தானியாவுக்கான மாணவர்களுக்கான விசா அனுமதி பெற்று பிரித்தானியா வருவதற்காக இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையம் சென்ற 18 தமிழ் மாணவர்கள் தமது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

Colombo-International-Airportஇன்று மதியம் இலங்கை நேரப்படி 1.15 க்கு கொழும்பிலிருந்து புறப்படவிருந்த ஏ.எல்.கே.503 விமானத்தில் இவர்கள் பயணிக்க இருந்தனர்.
 
குடிவரவு குடியகல்வு பரிசோதனை அனைத்தும் முடித்து விமானத்திற்காகக் காத்திருக்கச் செல்கையிலேயே இவர்கள் அனைவரும் பயணத்தைத் தொடர விடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என கட்டுநாயக்க விமானநிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டதற்கு நியாயமான காரணமெதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிய வருகிறது.
 
அண்மைக்காலமாக கட்டுநாயக்கா விமானநிலையத்தின் ஊடாகப் பயணம் செல்ல முற்பட்ட இளைஞர்கள் பலர் தமது பயணத்தைத் தொடரவிடாமல் அங்குள்ள பலவேறு புலனாய்வுக்குழுக்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவதும் அவர்களது பிரயாணம் தடுக்கப்பட்டு வருவதுமான செய்திகள் ஏற்கெனவே வெளியாகியிருந்தன. 

இதேவேளை, அண்மைக்காலமாக சிங்கப்பூருக்குச் செல்வதற்காகச் சென்ற பெரும்பாலான தமிழ் இளைஞர்களும்; சிங்கப்பூர் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது.
 
நேற்று முன்தினம் சிங்கப்பூர் சென்ற 11 தமிழ் இளைஞர்கள் சிங்கப்பூர் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
 
போதுமான ஆவணங்கள் மற்றும் பணத்துடன் செல்பவர்களுக்கு சிங்கப்பூர் விமான நிலையத்தில் வைத்து 7 அல்லது 14 நாட்களுக்கு  விசா வழங்கப்படுவதே நடைமுறையாக இருக்கையில் அவ்வாறு சென்ற தம்மை எதுவித காரணங்களுமின்றி சிஙிகப்பூர் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பியுள்ளதாக சண்முகம் தயாபரன் என்ற இளைஞர் தெரிவித்துள்ளார். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டவர் அந்த இளைஞர்.
 
இவ்வாறு தமிழ் இளைஞர்கள் திருப்பி அனுப்பப்பட்டமையானது வழமைக்கு மாறான ஒரு நிகழ்வு எனச் சுட்டிக் காட்டப்படுகிறது.
 
அது தவிர மீளத் திரும்புவதற்கான பயணச்சீட்டுடன் சென்ற இவர்களை மறுநாள் அதே பயணச்சீட்டை உறுதிப்படுத்தி விட்டு திருப்பி அனுப்பாமல் இவர்கள் தமது செலவிற்காகக் கொண்டு சென்ற பணத்தைப் பெற்று புதிதாக பயணச்சீட்டுப் பெற்று உடனடியாக திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். 

திரும்பி வந்த இந்த 11 தமிழ் இளைஞர்களையும் கைது செய்துள்ள புலனாய்வுப் பொலிஸார் அவர்களை இதுவரை விடுதலை செய்யவில்லை எனத் தெரியவருகிறது. 
 
அண்மைக்காலமாக சிங்கப்பூர் செல்லும் தமிழ் இளைஞர்கள் மற்றும் வர்த்தகர்கள் திருப்பி அனுப்பப்படுதலானது இலங்கை அரசின் வற்புறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்படுகிறதா எனும் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது என வர்த்தகப் பிரமுகர் ஒருவர் ஐயம் எழுப்பியுள்ளார்.
 
இதேவேளை இது குறித்து குளோபல் தமிழ்ச் செய்தியின் புலனாய்வுச் செய்தியாளர் விமான நிலையத்தில் கடமையாற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவரிடம்  உரையாட சந்தர்ப்பம் ஏற்பட்ட போது மிகவும் மனவேதனையோடு பல விடயங்களை அவர் வெளியிட்டார்.
 
கடந்த 4 – 5 மாதங்களாக இந்த அநியாயம் தொடர்கின்றது. குறிப்பாக வெளிநாடுகளுக்கு புறப்படும் தமிழ் இளைஞர்கள் யுவதிகள் குடும்பங்கள் விசாரணை என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டு பணம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு பின் விடுவிக்கப்படுகிறார்கள்.
 
உயர்மட்ட அனுசரணையுடன் இடம்பெறுவதால் புலனாய்வுப் பிரிவினரின் நடவடிக்கைகளில் விமான நிலைய உயரதிகாரிகள் எதுவும் செய்ய முடியாது எனவும்; தெரிவித்தார்.
 
இவை யாவும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஸவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இடம்பெறுகிறது என கவலை வெளியிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.