பொய் சொன்னது யார் – மாண்புமிகு கருணாநிதி அய்யாவா? அல்லது நம்முடைய மகிந்த அண்ணாவா?

இடைத்தங்கல் முகாம் மக்கள் வாழும் மக்களின் அவல வாழ்க்கை தொடர்பில் இன்று இந்தியர்களுக்கும், இங்கிலாந்துகாரர்களுக்கும் மிக நன்றாகவே தெரியும். எனவே உண்மைகளை மறைத்து, நான் பேசியதை திரித்துக்கூறி அமைச்சரவை பேச்சாளர் அனுர பிரியதர்சன யாப்பா அல்லல்படத் தேவையில்லையென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

question-maki-karunaநேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,  தமிழக எம்பிக்கள் இலங்கைக்கு விஜயம் செய்தமையினால் எனக்கு இதயம் வலிக்கின்றது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். எனக்கு இதயம் வலிப்பது உண்மைதான். ஆனால் இந்திய எம்பிக்களின் வருகை காரணமாக எனக்கு வலிக்கவில்லை. அவர்கள் வருகை தொடர்பில் நான் மகிழ்ச்சிதான் அடைகின்றேன்.
 
ஆனால் முகாம்களிலே அவல வாழ்க்கை வாழும் எங்கள் தமிழ் உடன் பிறப்புக்களை நினைத்துத்தான் எனது இதயம் வலித்து இரத்தக்கண்ணீர் வடிகின்றது என்பதை அமைச்சர் புரிந்துக்கொள்ளவேண்டும்.
 
இலங்கை வந்து சென்ற எம்பிக்கள் நலன்புரி முகாம்கள் தொடர்பில் திருப்தி தெரிவிக்கவில்லை என தமிழக முதல்வர் கருணாநிதியின் புதல்வி கனிமொழி என்னிடம் நேரடியாக கூறினார். இதை நான் பொறுப்புடன் கூறுகின்றேன். ஆனால் தமிழக எம்பிக்கள் திருப்தி தெரிவித்தாக அரசு தகவல் திணைக்களம் கூறியது. எப்படியிருந்தாலும் இலங்கையிலும், இந்தியாவிலும் நிலவுகின்ற வாழ்க்கை நிலைமைகளுடன் ஒப்பிடும் பொழுது  முகாம்களில் நிலவுகின்ற நிலைமை பாரிய வேறுபாட்டை காட்டாது. இதைத்தான் நான் குறிப்பிட்டு காட்டினேன்.
 
இந்த முகாம் மக்களை சுற்றி முட்கம்பி வேலிகளும், இராணுவ காவலும் போடப்பட்டுள்ளன. இந்த மக்கள் தங்களது விருப்பங்களுக்கு மாறாக அடைத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதையே இது காட்டுகின்றது. இதுதான் முகாம்கள் தொடர்பிலே எங்களதும், இந்தியாவினதும், ஐநா சபை உட்பட அகில உலகினதும் கவனத்தை ஈர்த்துள்ள முக்கிய பிரச்சினையாகும். இதனால் தான் முழு உலகுமே, மக்களை விடுவியுங்கள் என ஒருமித்த குரலில் கூறுகின்றது.
 
இது அமைச்சர் யாப்பாவிற்கு கேட்கவில்லையா? தங்களுக்கு எதுவும் தேவையில்லை, எங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு மட்டும் அனுமதி பெற்றுத்தாருங்கள் என்று இந்த மக்கள் ஒரே குரலில் தமிழக எம்பிக்களிடம் தெரிவித்துள்ளார்கள். மக்களது இந்த ஏகோபித்த கோரிக்கையை தமிழக எம்பிக்கள் இன்று சென்னையிலே கூறியுள்ளார்கள். இது தொடர்பிலே தமிழக முதல்வர் கருணாநிதி இன்னும் இரண்டு வாரத்திற்குள் அதாவது இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் சுமார் 58 ஆயிரம் அகதிகள் தமது சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக இலங்கை அரசாங்கம் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
 
ஆனால் இந்த 15 நாள் மீள்குடியேற்றம் பற்றி தமக்கு தெரியாது என அமைச்சரவை பேச்சாளர் கூறுவது வேடிக்கையாக இருக்கின்றது. தமிழக எம்பிக்கள் சொல்லாதவற்றையும் சொன்னதாகக்கூறி முகாம் நிலைமைகள் திருப்தியாக இருப்பதாக இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது என கூறுகின்ற அமைச்சருக்கு, அதே எம்பிக்களின் தலைவர் தெரிவிக்கின்ற முக்கியமான ஒரு கருத்திற்கு பதில் சொல்ல தெரியவில்லை.
 
எனவே உண்மைக்கு புறம்பாக செய்தி அறிவிப்பது தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியா அல்லது இலங்கை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவா என்று இலங்கை தமிழ் மக்கள் சார்பிலே நாம் கேள்வி எழுப்புகின்றோம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.