“வணங்காமண்” கப்பல் பொருட்கள், வரும் வாரம் கொழும்பு துறைமுகத்தில் இருந்து வெளியேற்றப்படவுள்ளன

“வணங்காமண்” கப்பலின் மூலம் பிரான்ஸில் இருந்து எடுத்து வரப்பட்ட, சிறீலங்காயில் இடம்பெயர்ந்தோருக்கான நிவாரணங்கள், சுமார் மூன்று மாதங்களுக்கு பின்னர்,அடுத்த வாரமளவிலேயே கொழும்பு துறைமுகத்தில் இருந்து, வெளியில் எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

vanangamannகடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், கொழும்பு துறைமுகத்திற்கு வந்த வேளையில், சிறீலங்காக் கடற்படையினரால் இந்த “வணங்காமண்” கப்பல் இடையில் தடுக்கப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.  பின்னர் சர்வதேச அழுத்தங்களால், அது மீண்டும் திருப்பியனுப்பப்பட்டது.

இந்தநிலையில் சர்வதேச கடற்பரப்பில் நீண்ட நாட்கள் தரித்திருந்த நிலையில். தமிழக சென்னை துறைமுகத்திற்கு அந்தக் கப்பல் அனுமதிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த கப்பலின் பொருட்கள் “கேப் கொலராடோ” கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து கொழும்பு துறைமுகத்தில், தாமதக் கட்டணம் செலுத்தப்படாத நிலையில், அந்த பொருட்கள் தேங்கியிருந்தன.

அதேநேரம் குறித்த பொருட்களும் பழுதடையும் நிலைக்கு வந்துள்ளன. இந்த நிலையிலேயே ஜனாதிபதி செயலகம், இன்று தாமதக் கட்டணத்திற்கான இரண்டு மில்லியன் ரூபாவை சிறீலங்கா செஞ்சிலுவை சங்கத்திடம் வழங்கியுள்ளது.

இதனை தவிர செஞ்சிலுவை சங்கமும் ஒக்டோபர் 6 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையிலான காலத்திற்காக வரி உட்பட்ட கட்டணங்களாக ஐந்து லட்சம் ரூபாவை செலுத்தியுள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தின் உதவி பணிப்பாளர் நாயகம், சுரேன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து 884 தொன்களை கொண்ட குறித்த பொருட்கள், எதிர்வரும் திங்கட்கிழமையன்று தர நிர்ணய சபையின் பரிசோதனையின் பின்னர், கொழும்பு துறைமுக களஞ்சியத்தில் இருந்து வெளியில் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

அத்துடன், எதிர்வரும்  புதன்கிழமையன்று கொழும்பு துறைமுகத்தில் இருந்து வெளியில் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

இதனையடுத்தே அவை இடம்பெயர்ந்தோர் மத்தியில் விநியோகிக்கப்படவுள்ளதாக சுரேன் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.