தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா?

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களில் முதல் கட்டமாக 58,000 பேர் இன்னும் 15 நாட்களுக்குள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே உறுதி அளித்துள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் இன்றே (வியாழக்கிழமை) தொடங்கும் என்றும் சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

TAMIL_NADU_MP_S_5230fஅத்துடன், எஞ்சியிருப்பவர்களை படிப்படியாக அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும் உறுதியளித்துள்ளதாகவும், இந்த ஆறுதலான செய்தியை தமிழக மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.முன்னதாக, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்திய மத்திய அரசினை நேரில் சந்தித்து இலங்கைக்கு குழுவொன்றை அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

ஆனால் தற்போது, சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபச்சவே குழு ஒன்றை அனுப்பி, இலங்கை நிலவரத்தை நேரில் தெரிந்து கொள்ளுமாறு தனக்கு கடிதம் எழுதியிருந்ததாகவும், அதன் அடிப்படையில் தான் செயல்படுவது முறையல்ல என்பதால் மத்திய அரசுக்கு அனுப்பியதாகவும், அதன் பிறகு தி.மு.க, கொங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் டில்லி சென்று பிரதமர் மற்றும் சோனியா காந்தியை சந்தித்ததாகத் தெரிவித்துள்ள முதல்வர் கருணாநிதி, மகிந்த ராஜபக்சவின் கடிதத்துக்கு இணங்கவே ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும். அதன் பேரில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் சென்னை வந்து தன்னை சந்தித்தார். இருவரும் பேசி, 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவை அனுப்ப முடிவு செய்தோம் என்று கூறியுள்ளார். அதன் அடிப்படையில், தி.மு.க., கொங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய மூன்று கட்சிகளின் சார்பில் அந்தக் கட்சிகளின் செலவிலேயே அந்தக் குழுவை அனுப்புவதென்று தீர்மானித்து அதற்கு சிறீலங்கா அரசின் ஒப்புதலைப் பெற்று பத்தாம் திகதியன்று அந்தக் குழு இலங்கை சென்றது என்றும் கூறினார்.

வன்னி முகாம்களில் தமிழ் மக்கள் படும் அவலத்தை அறிந்து, தமிழக அரசே இலங்கைக்கு குழுவொன்றை அனுப்பி நிலைமைகளை நேரில் அறிந்துகொள்வதற்கு முயற்சிப்பதாக கருதப்பட்டது. அவ்வாறான ஒரு தோற்றத்துடனுமே தமிழக – மத்திய அரசு பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்புக்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால், மகிந்த அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே குழுவினர் அனுப்பப்பட்டதாக தமிழக முதல்வர் தற்போது தெரிவித்துள்ள கருத்தானது, பெரும் அதிர்ச்சியையும் சந்தேககங்களையும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், பல்வேறு சர்வதேச நாடுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் கேட்டுக்கொண்டபோதும் வன்னி இராணுவச்சிறை முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்கு பல்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லி மறுத்தவரும் சிறீலங்கா அரசு, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணத்திற்கு செவிமடுத்து அங்கிருக்கும் மக்களில் 58 ஆயிரம் பேரை விடுவிப்பதாகச் சொல்லியிருப்பதானது தமிழக அரசியல் தலைவர்களை ஏமாற்றுவதற்காகவா அல்லது எல்லலோரும் சேர்ந்து நடத்தும் ஒரு திட்டமிட்ட நாடகமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அம் முகாமைப் பார்வையிட்டு திரும்பிய ஐ.நா. பொதுச் செயலர் உட்பட உலகின் பல நாடுகளில் மனித உரிமைவாhதிகளும் தங்கள் அதிர்ச்சியையும், வேதனையையும் வெளியிட்டு வரும் நிலையில், நாடு திரும்பியதன் பின்னர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கொங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, இங்குள்ள ஊடகங்கள் சொல்வதுபோல் அங்குள்ள முகாம்கள் மோசமாக இல்லை. மக்கள் அவர்களை தங்களின் இடங்களுக்கு அனுப்பச் சொல்லியே கேட்கின்றனர்.

பெரிதாகக் குறையொன்றும் இல்லை. அவர்களை அவர்களின் இல்லங்களுக்கு அனுப்ப வேலைகள் நடைபெறுகிறது என்று கூறி அந்த மக்களின் அவலத்தை மறைத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றார்.சிறீலங்காவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வரிச்சலுகையைப் பெற்றுக்கொடுப்பதற்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய பயணம் இதுவென கூறப்படுகின்றது.

அகதிகள் தொடர்பாக சிறீலங்காவிற்கு நல்ல பெயரை ஏற்படுத்தினாலேயே ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வரிச்சலுகையை பெறமுடியும் என்பதனாலேயே இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. எனினும், அடுத்து வரும் 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் மக்களை சிறீலங்கா அரசு மீளக் குடியேற்றுவது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் எனத் தெரிவிக்கும் அரசியல் அவதானிகள், இது தமிழக அரசினை ஏமாற்றும் அவர்களை கோமாளிகளாக்கும் சிறீலங்கா அரசின் ஓர் உத்தரவாதம் என்று குறிப்பிடுகின்றனர்.

வன்னியில் கடுமையான போர் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சிகளை அடுத்து தமிழக அரசியல் தலைவர்களை சிறீலங்காவின் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கோமாளிகள் என்று வர்ணித்திருந்தார். தற்போது உண்மையாகவே தமிழக அரசியல் தலைவர்களை சிறீலங்கா கோமாளிகளாக ஆக்கப்போகின்றதா என்பது இன்னும் 14 நாட்களில் தெரியவந்துவிடும் எனவும் அந்த அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

– ஈழமுரசு

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.