வதை முகாம்களைத் திறக்கும் வரை விழி தூங்கோம், தொடர்ந்து போராடுவோம் – கனடியத் தமிழர்

IMG_6390நூற்றி ஐம்பது நாட்களிற்கு மேலாகத் தமிழ் மக்களை வதைமுகாம்களில் அடைத்து வைத்துள்ளதைக் கண்டித்தும் அவர்கள் விடுதலைக்கு உலக நாடுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கனடியத் தமிழர்கள் நேற்று சனிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்நடவடிக்கையின் பின்னர் வன்னிப்பகுதியில் போரிற்கிடையில் சிக்கியிருந்த தமிழ் மக்களை சிறீலங்காப் படைகளின் கண்காணிப்பில் உள்ள வதைமுகாம்களில் சிறீலங்கா அரசு அடைத்து நூற்றி ஐம்பது நாட்கள் கடந்துள்ளது.

மிகவும் சிறிய முட்கம்பிவேலிகள் போடப்பட்ட நிலப்பரப்பினில் அண்ணளவாக 250 000 மக்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். எதிர்வரும் மாதங்களில் நிகழவுள்ள பருவகால மழைப் பொழிவின் போது இம் மக்கள் பெரும் இடர்களை எதிர்நோக்கவுள்ளார்கள். எதுவித தவறும் செய்யாத இம் மக்கள் தங்கள் சொந்த இடங்களிற்குச் சென்று மீளக்குடியேற சிறீலங்கா அரசு அனுமதி மறுத்து வருகின்றது.

இதனைக் கண்டித்தும் இதில் உலக நாடுகள் கவனம் எடுத்து இம் மக்கள் வீடுகளிற்கு செல்ல வழிவகை செய்ய வேண்டியும் நேற்றைய தினம் ரொறன்ரோ நகரில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் துணைத் தூதுவராலயத்திற்கு முன்னாள் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

மாலை 1 மணியவில் ஆரம்பித்த இப் போராட்டம் ஆனது மாலை 7 மணிவரை நடைபெற்றிருந்தது. தமிழ் மக்களின் இயல்பு வாழ்விற்கு வழிவகை செய்யக் கோரி நடைபெற்ற இப்போராட்டத்திற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இக் கவனயீர்ப்பு போராட்டத்தினை கனடிய தமிழர் சமூகமும் கனடிய மாணவர் சமூகமும் இணைந்து ஒழுங்குசெய்திருந்தனர்.

சிறீலங்கா தமிழர்கள் மீது போரை ஆரம்பித்து இனவெறியின் உச்சக்கட்டத்தில் தொகைதொகையாக தமிழர்களை கொன்று குவிப்பதனைத் நிறுத்தக் கோரி அமெரிக்கத் துணைத் தூதுவராலயத்திற்கு முன்னால் ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்புப் போராட்டமும் நேற்றுடன் 175 நாட்களை அடைந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.