தமிழ்நாட்டுக் குழுவிடம் புகார்கள் கூறிய மக்கள்தான் கடத்தப் பட்டுள்ளார்களா?

இலங்கையில் முகாம்களி்ல் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை மறு குடியமர்த்துவது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஆலோசன நடத்தினார்.

சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சிதம்பரம், அண்மையில் தமிழக எம்.பிக்கள் குழு இலங்கை சென்று, முகாம் தமிழர்களை சந்தித்து நிலவரங்களை அறிந்து வந்துள்ளது. அவர்கள் ஆய்வறிக்கையும் வழங்கியுள்ளனர். இது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது.

question-mark8இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியுடன் இன்று ஆலோசனை நடத்தினேன். இலங்கை தமிழர் மறுவாழ்வு மற்றும் அவர்களை சொந்த இடங்களுக்கு குடியமர்த்த என்னென்ன அறிவுரை இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என்பது குறித்துப் பேசினோம்.

முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசித்தது குறித்து மத்திய அமைச்சரவையிலும் விவாதிக்கப்படும்.

எம்.பிக்கள் குழு இலங்கை சென்று வந்த பிறகு இதுவரை சுமார் 5,000 தமிழர்கள் சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இது தொடக்கம் தான் என்பதால் இந்தப் பணி மெதுவாக உள்ளது. போக போக அனைவரும் வேகமாக குடியமர்த்தப்படுவார்கள்.

இதுபற்றி இலங்கைக்கு போதிய அறிவுரை வழங்கப்படும்.

இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக ஏற்கனவே ரூ.500 கோடி மத்திய அரசு  வழங்கி உள்ளது. மீண்டும், இன்னும் ரூ.500 கோடி வழங்கவும் தயாராக உள்ளது.

இதுகுறித்து திட்ட அறிக்கை இலங்கை அரசிடம் இருந்து இன்னும் பெறப்படவில்லை. வந்த பிறகு நிதி ஒதுக்குவோம் என்றார் சிதம்பரம்.

தமிழர்கள் கடத்தலா?

முகாம்களுக்கு வந்து தங்களிடம் குறை கேட்ட தமிழக எம்பிக்களிடம் புகார் கூறிய தமிழர்கள் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, அனுமானமாக கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற இயலாது என்றார்.

தீர்மானம்:

முன்னதாக இரு தினங்களுக்கு முன் முதல்வர் கருணாநிதி தலைமையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பணிகள் குறித்து கலந்தாலோசிக்க, சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மொழி அறிஞர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோருடைய கூட்டம் நடைபெற்றது.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:

இலங்கையில் ஈழத்தந்தை செல்வா காலத்திலிருந்து தொடங்கி நடைபெறுகின்ற தமிழ் இனத்தின் உரிமைப் போராட்டத்தில் ஒரு கட்டமாக இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழக்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டு- முள்வேலியிட்ட முகாம்களுக்குள் அவர்கள் அடைபட்டு இன்னலுற்றனர்.

அவர்களின் நிலைமைகளை நேரில் கண்டுணர்ந்து, அவர்தம் துயர் துடைப்பதற்காக இந்திய தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளான திராவிட முன்னேற்றக்கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லி சென்று, இந்திய பிரதமர் மன்மோகன்சிங், கூட்டணியின் வழிகாட்டும் தலைவர் சோனியாகாந்தி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரிடமும் நிலைமைகளை விளக்கினர்.

இந்திய, இலங்கை அரசுகளின் ஒப்புதலுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்து பேர் கொண்ட குழு இலங்கை சென்று, இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் இலங்கை அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மற்றுமுள்ள அமைப்புகள், முகாம்களில் அடைபட்டு அல்லலுறும் இலங்கை தமிழர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் அனைவரையும் சந்தித்து நிலைமைகளை உணர்ந்து, அந்த துன்ப துயரம் நீங்கி இலங்கை தமிழர்கள் மீண்டும் அவரவர் வாழ்விடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அவர்கள் எடுத்துரைத்த கருத்தை இலங்கை அரசும் ஏற்றுக்கொண்டு இந்த மாதம் 15-ந் தேதி முதல் முதற்கட்டமாக சுமார் 58 ஆயிரம் தமிழர்களையும், அடுத்தடுத்து படிப்படியாக முகாம்களில் உள்ள மற்ற தமிழர்கள் அனைவரையும் அவரவர் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைப்பதாக உறுதி தெரிவித்திருக்கிறது.

அவ்வாறு அளித்துள்ள உறுதிமொழியின்படி முகாம்களில் உள்ள தமிழர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்லும் வகையில் அனுப்பி வைக்கப்படுவதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளதற்கும்- இதற்கான முயற்சிகளில் உரிய வழியில் ஈடுபட்ட தமிழக முதல் அமைச்சரும், அதற்கு ஒத்துழைப்பு நல்கிய இந்திய பேரரசுக்கும் இந்தக் கூட்டம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது.

அத்துடன் இத்தகைய மகிழ்ச்சியை முகாம்களில் துயருறுகின்ற எஞ்சியுள்ள தமிழர்களும் பெறுதற்கரிய வாய்ப்பினை இலங்கை அரசு உருவாக்கிட இந்திய அரசு ஆவன செய்திட வேண்டுமெனவும்; இலங்கையில் தமிழர்கள்  உள்ளிட்ட எல்லா மக்களும் இன உரிமை, மொழி உரிமை பெற்றிடும் வண்ணம்இ அந்நாட்டின் அரசியல் தீர்வு காண்பது ஒன்றே சிறந்த வழி என்பதை உணர்ந்து அதற்குரிய முறையின் நடவடிக்கைகள் வேண்டுமெனவும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இந்த தீர்மானத்தை முனைவர் அவ்வை நடராசன் முன்மொழிந்திட அப்துல்ரகுமான் வழி மொழிந்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.