இலங்கைக்கு இன்னும் மேலதிகமாக 500 கோடி ரூபா உதவி வழங்குகிறது இந்தியா

காங்கிரஸ் திமுக எம்பிக்கள் குழு இலங்கை சென்று இடைத்தங்கல் முகாம்களை பார்வையிட்டு அதிபர் ராஜபட்ஸவைச் சந்தித்து கலந்துரையாடி வந்த பின்னர். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் மாநில முதல்வர் கருணாநிதியும் நேற்று சென்னையில் சந்தித்துப் பேசினார்கள்.

indiasrilankaமுதல்வர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் ப. சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். சுமார் 20 நிமிஷங்கள் நீடித்த இந்த ஆலோசனைக்குப் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலை குறித்த தமிழக எம்.பி.க்களின் குழு அறிக்கை என்னிடமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக முதல்வர் கருணாநிதியிடம் ஆலோசனை நடத்தினேன். அவர் சில கருத்துகளை என்னிடம் தெரிவித்தார்.
 
மத்திய அமைச்சரவையில் இந்த கருத்துகள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும். தமிழர் பகுதிகளைப் புனரமைப்பதற்காக மத்திய அரசு ஏற்கெனவே ரூ. 500 கோடி நிதியை அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் வசித்த பகுதிகளைப் புனரமைப்பது தொடர்பான திட்ட அறிக்கை இலங்கை அரசிடம் இருந்து கிடைத்தவுடன் மேலும் ரூ. 500 கோடி ஒதுக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது.
 
இலங்கைத் தமிழர்களை அவர்கள் வசித்த இடங்களில் மீண்டும் குடியமர்த்த தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும். தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை சென்று வந்த பிறகு 5,000 தமிழர்கள் முகாம்களில் இருந்து அவர்கள் ஏற்கெனவே வசித்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மெதுவாக நடைபெற்று வரும் இந்தப் பணியை விரைவுபடுத்த தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்றார் ப. சிதம்பரம்.
 
இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலைமையை நேரில் கண்டறிவதற்காக மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் 10 பேர் அடங்கிய தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றது. இலங்கைப் பயணத்துக்குப் பிறகு முதல்வர் கருணாநிதியிடம் எம்.பி.க்கள் குழுவினர் அக்டோபர் 14‐ம் தேதி அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையில் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களின் அவல நிலை குறித்து விளக்கப்பட்டிருந்தது. முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களில் 58 ஆயிரம் பேர் 15 நாள்களில் விடுவிக்கப்படுவர் என்று இந்தக் குழுவினரிடம் இலங்கை அதிபர் ராஜபட்ச உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.