ராஜ் ராஜரட்னம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியமைக்கான சான்றுகள் இல்லை

வர்த்தக மோசடி குற்றச்சாட்டின் பேரில் தற்போது அமெரிக்க காவல்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ராஜ் ராஜரட்னம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியமைக்கான சான்றுகள் எதுவுமில்லை என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

rajrajaratnam52 வயதான ராஜ் ராஜரட்னம் அமெரிக்க நிதிச் சந்தையில் பாரிய வர்த்தக மோசடியொன்றை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
உலக செல்வந்தர்கள் பட்டியலில் ராஜ் ராஜரட்னம் 559ம் நிலையை வகிப்பதாக சர்வதேச வர்த்தக சஞ்சிகையான போர்பஸ் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு அவர் பண உதவிகளை வழங்கியுள்ளதாகவும், அவர் பண உதவிகளை வழங்கிய காலப்பகுதியில் இலங்கையிலோ அல்லது அமெரிக்காவிலோ குறித்த அமைப்பு தடை செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
 
சமூக நல நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நிதி உதவிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் விசாரணைப் பிரிவு உயரதிகாரி டி.கே. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
 
இலங்கை பங்குச் சந்தையில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவு பங்கு வர்த்தகத்தை ராஜ் ராஜரட்னம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ராஜ் ராஜரட்னம் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து இன்றைய தினம் கொழும்புப் பங்குச் சந்தையில் 3.1 வீத சரிவு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
கடந்த 4 மாதங்களில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி இது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். ராஜ் ராஜரட்னம் ஜோன் கீல்ஸ் நிறுவனத்தில் 9.2 வீத பங்குகளையும், பொது வர்த்தக வங்கியில் 12.98 வீத பங்குகளையும், டிஎப்சீசீ 9.8 வீத பங்குகளையும் முதலீடு செய்துள்ளதாக பங்குத் தரகர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாவே இந்த வீழ்ச்சியேற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.