ராஜபக்சே, கோத்தபயா போர்க் குற்றவாளிகள் – திருமா ஆவேசம்

இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

thiruma_130609news001இலங்கை அதிபர் ராஜபக்சேவும், அவரது தம்பி கோத்தபயா ராஜபக்சேவும் போர்க் குற்றவாளிகள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உலக சமுதாயம் மெளனமாக இருப்பது வேதனையாக இருக்கிறது. இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

இலங்கைக்கு சமீபத்தில் திமுக தலைமையில் எம்.பிக்கள் குழு சென்றது. இதில் திருமாவளவனும் இடம் பெற்றிருந்தார். இலங்கை பயணத்தின்போது இவரும் ஒரு மெளனமான உறுப்பினராக சென்றிருந்தார். ராஜபக்சேவை தமிழக குழு சந்தித்தபோது திருமாவை சுட்டிக் காட்டி பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று பச்சையாகவே கிண்டலடித்தார் ராஜபக்சே.

இதை ஒரு ஜோக் என்று சென்னை திரும்பிய பின்னர் தெரிவித்தார் திருமாவளவன். மேலும்இ இலங்கை பயணம் குறித்த திமுக – காங்கிரஸ் குழுவின் அறிக்கையில், இலங்கை முகாம்களில் பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லை என்பது போல தெரிவிக்கப்பட்டிருந்தது.

திமுக – காங் கூட்டணிக் குழுவின் வருகைக்கு, ஈழத் தமிழர்களிடையே பெரிய அளவில் வரவேற்பில்லை என்று பரவலாக கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இருப்பினும் திருமாவளவன் தனது கருத்துக்களைத் தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் திருமா. அதில் ராஜபக்சேவை கடுமையாக சாடியுள்ளார்.

திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் குழு ஈழத் தமிழர்களின் வாழ்நிலைகளை நேரில் சென்று ஆய்வு செய்து, முதல்-அமைச்சரிடம் தமது அறிக்கையை அளித்தது. எதிர்க்கட்சிகளின் அவதூறுகளுக்கு மாறாக, அந்த அறிக்கை ஈழத் தமிழர்களின் அவலங்களை உள்ளது உள்ளபடியே உண்மைகளை வெளிப்படுத்தியது. இந்த பயணத்தின் விளைவாக சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் இறுக்கம் நிறைந்த மமதைப் போக்கில் சிறிய அசைவும் தளர்வும் ஏற்பட்டுள்ளது.

அப்பட்டமான மனித உரிமை மீறல்கள்

அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் அங்கே தலைவிரித்தாடுகின்றன. முகாம்களில் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஈழத் தேசமே ராணுவத்தின் கெடுபிடிக்குள் சிக்கிச் சிதைந்து வருகிறது.

மக்களிடையே மன அழுத்தங்களும் அச்சமும் பீதியும் மேலோங்கி நிற்கின்றன. தமிழ் மக்களிடையே அச்சத்தாலான அடிமைத்தனமும் பரவுவதை அவர்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காகக் கையேந்தி நிற்கும் நிலைமைகளிலிருந்து அறிய முடிகிறது.

மெலிந்த உடல்களிலிருந்து ஏக்கப் பெருமூச்சுகளும், முனகல்களும் மட்டுமே வெளிப்படுகின்றன. நாவிலிருந்து வார்த்தைகள் வராமல் விழிகளிலிருந்து தாரை தாரையாய் நீர் கொட்டுவதை காண முடிகிறது.

2 பேர் மட்டுமே வசிக்கக்கூடிய கூடாரங்களில் 8 பேர், 10 பேர்களை அடைத்து வைத்திருக்கும் மனிதநேயமற்ற கொடுமைகள் திணிக்கப்பட்டுள்ளன. இந்த மனித அவலங்களை மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக் கொள்ள முடியாது.

வேடிக்கை பார்க்கும் இந்தியா

ஆனால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தக் கொடுமைகளை எப்படி வேடிக்கை பார்க்கின்றன என்பது தான் பெரும் கொடுமையாக உள்ளது.

இந்திய அரசு ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக மேலும் ரூ.500 கோடி வழங்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முகாமில் உள்ளவர்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென்பதும், அவர்கள் மறுவாழ்வுக்கு உதவ வேண்டுமென்பதும் இன்றியமையாத ஒன்று என்றாலும், சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் ஈவிரக்கமற்ற மனித உரிமை மீறல்களை உலக அரங்கில் அம்பலப்படுத்த வேண்டியதும் அத்தகைய இனவெறியாளர்களை தண்டிக்க வேண்டியது மிக மிக இன்றியமையாத ஒன்றாகும்.

போர்க் குற்றவாளிகள்

அந்த வகையில் சிங்கள ஆட்சியாளர்களை, குறிப்பாக ராஜபக்சே சகோதரர்களை சர்வதேசப் போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டுமெனவும் சிங்கள அரசுக்கு அனைத்துலக அளவில் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமெனவும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை வலியுறுத்துகிறோம்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி 22-ந் தேதி சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.