சரத் பொன்சேகா பொது வேட்பாளர் என்றால் நாம் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் ‐ மனோ கணேசன்

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தேச எதிர்க்கட்சி கூட்டணியின் பொது வேட்பாளராக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா நியமிக்கப்படக்கூடும் என்ற கருத்துடன் எமக்கு உடன்பாடு கிடையாது. ஐதேக, முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி (மக்கள் பிரிவு) ஆகிய கட்சிகளுடன் இணைந்து எமது கட்சியும் நடத்திவரும் பேச்சுவார்த்தையின் மூலமாக உருவாகவிருக்கும் ஐக்கிய தேசிய கூட்டணியின் சார்பாகவோ அல்லது ஜேவிபியுடன் இணைந்தோ சரத் பொன்சேகா பொது வேட்பாளராக நிறுத்தப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

2143Mano Ganeshan Jஇந்நிலை ஏற்படுமானால் ஐக்கிய தேசிய கூட்டணியில் இருந்து ஜனநாயக மக்கள் முன்னணி வெளியேறும் என்று உறுதியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி எதிர்க்கட்சி தலைவரும், ஐதேக தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார் என ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
 
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுடன் இந்நாட்டில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்களுக்கு எந்தவிதமான பொதுத் தன்மைகளும் கிடையாது. இந்நிலையில் எம்மையும் உள்ளடக்கிய கூட்டணியின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை ஏற்றுக்கொள்ள முடியாது. நவ சிங்கள உருமைய என்ற கட்சியை சார்ந்த சரத் மனமேந்திர நமது கூட்டணியில் இதுவரையில் அங்கம் வகிக்கவில்லை.

இந்நிலையில் எமது கூட்டணி உள்ளிட்ட பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவுக்கு இவர் அழைப்பு விடுத்திருப்பது வேடிக்கையானது. எது எப்படியிருந்தாலும் சரத் பொன்சேகா ஜேவிபியின் வேட்பாளராக போட்டியிடுவது பற்றி நாம் கருத்து தெரிவிக்க முடியாது. அது ஜேவிபியின் நிலைப்பாடாக இருக்க முடியும். ஆனால் இன்று நாட்டிலே உருவாக்கப்பட்டுவரும் கருத்தோட்டத்துடன் பார்க்கின்றபொழுது எதிர்க்கட்சி கூட்டணியின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா நியமிக்கப்படக்கூடும் என்ற நியாயமான சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியிலே எழுந்துள்ளது இதை உடனடி முடிவுக்கு கொண்டுவரவேண்டியது இன்றைய தேவையாக இருக்கின்றது. இந்த அடிப்படையிலேயே எமது கட்சியின் நிலைப்பாட்டை நாம் தெளிவாக அறிவித்துள்ளோம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.