இலங்கை எரியும்போது மாநாடு நடத்தும் நவீன நீரோ கருணாநிதி – விஜயகாந்த்

தமிழர்கள் பிழைக்க வழியின்றி தினம், தினம் செத்து மடியும் இந்நேரத்தில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவேன் என்பது, நாடு பற்றி எரிகின்ற பொழுது பிடில் வாசிக்கலாம் வாருங்கள் என்று புதிய நீரோ மன்னனை போல கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

vijajaஇதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்போவதாக முன்பு அறிவித்த கருணாநிதி தற்போது இதற்கு மாறாக உலகத் தமிழ் செம்மொழி மாநாடு வரும் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

தமிழிலிலும் பிரித்தாளும் சூழ்ச்சி

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்கென உள்ள அகில உலகத் தமிழியல் ஆய்வு நிறுவனம் போதிய அவகாசம் கேட்டதை தவிர்த்து விட்டு “உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை’ நடத்த முடிவு செய்துள்ளார். இப்புதிய அமைப்பை இப்போது உருவாக்கியுள்ளதன் மூலம் சொந்தக் கட்சி முதல் வந்த கட்சி வரை தான் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சியை தமிழிலேயும் கருணாநிதி காட்டியுள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்சே போர் குற்றவாளி என்பதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். அதற்கு கருணாநிதி  துணை போகிறார். உலகநாடுகள் அனைத்திலும் தமிழர்கள் பிழைக்க வழியின்றி தினம்தினம் செத்து மடியும் இந்நேரத்தில் உலகத் தமிழ்த் செம்மொழி மாநாடு நடத்துவேன் என்பது, நாடு பற்றி எரிகின்ற பொழுது பிடில் வாசிக்கலாம் வாருங்கள் என்று புதிய நீரோ மன்னனை போல கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

பணம் சம்பாதிக்கவே வழி வகுக்கும்

தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரால் மத்திய அரசிடமிருந்து கணிசமான நிதியைப் பெற்றும், தமிழக அரசின் மூலமும் மக்கள் வரிப் பணத்தையும் செலவழித்து சம்பாதிப்பதற்கு வேண்டுமானால் இந்த மாநாடு வழிவகை செய்யுமே தவிர இதனால் தமிழ் மொழிக்கு எந்த ஒரு பயனும் இல்லை என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.