ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கை தொடர்பான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது

ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கை விவகாரம் குறித்த தீர்மானமொன்று நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இலங்கை விவகாரம் குறித்து சமர்ப்பிக்கப்பட் யோசனைத் திட்டத்திற்கு ஆதரவாக 57 உறுப்பினர்கள் வாக்களித்ததாகவும், 3 பேர் வாக்களிப்பின் போது பிரசன்னமாகவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

eu-flag-buttons-plus-nato-and-eu-thumb4763120அகதிகளை மீள் குடியேற்றுதல் மற்றும் 13 ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கம் தொடர்பில் இந்தத் தீர்மானங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
 
இலங்கைக்கு மனிதாபிமான ரீதியில் ஆதரவு வழங்குவதற்கு உலக நாடுகள் தயார் நிலையில் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய விவகாரப் பொறுப்பாளர் ஜேன் லம்பார்ட் தெரிவித்துள்ளார்.
 
அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டியது மிகவும் அவசியமானதென சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான மனித உரிமை நிலைமைகளை அபிவிருத்தி செய்யவும், அகதிகளை மீள் குடியேற்றவும் அரசாங்கம் அதிக முனைப்பு காட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இறுதிக் கட்ட அரசியல் தீர்வு ஒன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டுமென பல உறுப்பினர்கள் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
ஐக்கிய நாடுகளின் முக்கிய நிபந்தனைகளை இலங்கை மீறிச் செயற்பட்டுள்ளதாகவும் இதனால் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தை வழங்க முடியாது எனவும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் லியோனார்டு; ஒர்பான் தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறெனினும், இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என பிரித்தானிய உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை மீள் பரிசீலனை செய்யுமாறு மற்றுமொரு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிப்ரி வென் ஓர்டன் தெரிவித்துள்ளார்.
 
அகதிகள் மீள் குடியேற்றம், 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக அதிகாரப் பகிர்வு போன்றவை குறித்து இந்த அமர்வின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
 
தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியை தாம் அடைந்த ஓர் விடுதலையாக தமிழ் மக்கள் நோக்கக் கூடிய வகையில் இலங்கை அரசாங்கம் தமிழர் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை விரைவில் மீள் குடியேற்றத் தேவையான சகல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மனித உரிமை நிலைமை தொடர்பில் கண்காணிப்புக்களை மேற்கொள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.