இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் – அமெரிக்கா

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
 
கடந்த 25 ஆண்டு காலமாக நீடித்த யுத்த காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் இயன் கெலி தெரிவித்துள்ளார்.

usaflagஅரசாங்கத் தரப்பினாலும், விடுதலைப் புலிகளினாலும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சகல குற்றச் செயல்களும் விசாரிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானதென அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர் சிறுமியரை பலவந்தமாக தமது கெரில்லா போராட்டத்திற்கு பயன்படுத்தியதாகவும், அரசாங்கப் படையினர் சரணடைய வந்த போராளிகளை சுட்டுக் கொன்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
அரசாங்க மற்றும் அரசாங்க ஆதரவு துணை இராணுவக் குழுக்கள் கடத்தல் மற்றும் கப்பம் கோரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
 
சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணான வகையில் மேற்கொள்ளப்பட்ட சகல குற்றச் செயல்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.