ஜிஎஸ்பி வரிச்சலுகையைப் தற்காலிகமாக நிறுத்துவதான பிரேரணையைத் தயாரிப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது

ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ஜி.எஸ்.பி வரிச் சலுகையைப் பெறுவதற்கான சர்வதேச மனிதாய அடிப்படைகளை இலங்கை பின்பற்றியிருக்கிறதா என்பதைக் கண்டடைவதற்கான ஆணைக்குழுவின் விசாரணைகள் முற்றுப்பெற்றுள்ளன என ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் லூற்ஸ் குல்னர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

european20union20flagsஇலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையைப் பெறுவதற்கான நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்ற முடிவுக்கே ஆணைக்குழு விசாரணைகள் வந்தடைந்திருப்பதாகவும் அவ்வறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இலங்கைக்கான ஜிஎஸ்பி வரிச்சலுகையை தற்காலிகமாக நிறுத்துவதான பிரேரணையைத் தயாரிப்பது தொடர்பில் நாங்கள் இப்போது உறுப்பு நாடுகளுடன் கலந்தாலோசித்து வருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அறிக்கையில் இனங்காணப்பட்டுள்ள மனித உரிமை மீறல் பிரச்சினைகளை இலங்கை அரசாங்கம் கவனத்திற் கொள்ளும் வகையில் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் இது தொடர்பாக ஆக்கபூர்வமான முறையில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். இது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மனித உரிமை நிலைமையை முன்னேற்றகரமானதாக்குவதோடு உண்மையானதாகவும் உறுதியானதாகவும் அந்நடவடிக்கைகள் வேகமானதாகவும் அமைதல் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐநாவின் விசேட பிரதிநிதிகள், ஏனைய ஐநா அமைப்புக்கள், அங்கீகாரம் படைத்த மனித உரிமை நிறுவனங்கள் ஆகியவற்றின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே இவ்விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் அடிப்படையான மூன்று ஐநா மனித உரிமை சாசனங்களையும் தனது சட்டவாக்கத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தியதா என ஆணைக்குழு 2008 ஒக்.14ஆம் திகதி ஆராய்ந்தது. இம்மூன்று  ஐநா மனித உரிமை சாசனங்களோடு, 27 சர்வதேச மனித உரிமைகள் தொடர்பாக சானங்களையும் நிறைவேற்றியிருந்தால் மட்டுமே ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகள் இலங்கைக்குக் கிடைக்கும்.

ஜி.எஸ்பி பிளஸ் சலுகைகளைப் பெறும் நாடுகள் அவற்றைப் பெறுவதற்கு இந்நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். இவை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் விசாரணைகளை மேற்கொள்ள ஆணைக்குழுவை நியமிக்கும். ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு நிலைமைகளை அறிந்து கொள்ளும். அது கண்டடையும்  முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதாவது ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகள் தொடருமா அல்லது தற்காலிகமாக அவை  நிறுத்தப்படுமா என முடிவெடுக்கப்படும். இலங்கையின் நிலைமைகளை ஆராய்ந்த ஆணைக்குழு இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளைத் தற்காலிகாலிகமாக நிறுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.