யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐ.நா. மீண்டும் வலியுறுத்தியுள்ளது

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இறுதிக் கட்ட மோதல்களின் போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

unஇரு தரப்பினராலும் யுத்தக் குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான துரித விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
 
காஸா நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டதனைப் போன்று இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உண்மையை கண்டறியும் கண்காணிப்பு நடவடிக்கைகள் அவசியம் என நவனீதம் பிள்ளையின் பேச்சாளர் ரூபர்ட் கொல்வில் குறிப்பிட்டுள்ளார்.
 
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்களுக்கு இடையில் காஸா நிலப்பரப்பில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் மனித உரிமை பேரவையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு நிகரான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
 
எனினும், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்த முடியாதென இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.