தமிழர்களின் காணிகளை சிங்களவர்கள் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றி வருகின்றனர்

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை உள்ளிட்ட கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறுபான்மை இனத்திற்குச் சொந்தமான காணிகளையும், அரச காணிகளையும் பெரும்பான்மையினர் சட்டவிரோதமான முறையில் அரசிலுள்ள சிலரின் ஒத்துழைப்புடன் கைப்பற்றி வருகின்றனர் என்றும் இந்நடவடிக்கைகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்  நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

TamilNational_Sampanthanஇந்தச் சட்டவிரோதக் குடியேற்றம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் இல்லையேல் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு தவிர்க்க முடியாத சில முடிவுகளை எடுக்கவேண்டி வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு கூறினார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கிழக்கில் அரச காணிகளில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். இதனை அரசாங்கம் தடுக்க முயலவில்லை. நிறுத்தவும் முடியவில்லை. அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கிண்ணியா, மூதூர் பிரதான வீதியின் இரு பக்கங்களும் சுவீகரிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் குடியேற்றப்படுகின்றனர்.

இராணுவ வெற்றி ஒன்றைப் பெற்று வடக்கு கிழக்கில் உள்ள எல்லாப் பிராந்தியங்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் பிரகடனம் செய்ததன் பின்னர், முழுமையான பாதுகாப்புரிமையுடன் செயற்படும் பெரும்பான்மைச் சமூக உறுப்பினர்களினால் அரச காணிகளில் பரவலான சட்டவிரோதக் குடியேற்றம் நடைபெறுகின்றது. அத்தகைய சட்டவிரோத குடியேற்றம் தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு நடவடிக்கையாக உள்ளது. அத்தகைய சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பது தொடர்பில் அரசாங்கம் இற்றைவரை எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அத்துடன், அது உடனடியாக நிறுத்தப்படாவிடின் அது பன்மடங்காக பெருகி வெற்றிடமாக உள்ள எல்லா அரச காணிகளும் இந்நாட்டின் சட்டத்தை முற்றிலும் மீறி சட்டவிரோதமாகக் கைப்பற்றப்பட்டு அங்கு சட்டவிரோத குடியேற்றம் ஏற்பட வழிவகுக்கும். அத்தகைய சட்டவிரோத குடியேற்றம் திருகோணமலை மாவட்டத்தில் நடைபெறுகின்றது.

மொறவௌ முதலிக்குளம் பிரதேச செயலகப் பிரிவில் வேப்பங்குளம் மற்றும் முதலியார்குளம் ஆகிய கிராமங்களுக்கிடையில் பன்குளம் வரையில் திருகோணமலை  ஹொரவபொத்தானை வீதியின் இரு மருங்கிலும், சேருவில பிரதேச செயலகப் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சேருவில  பொலனறுவை வீதியின் இரு மருங்கிலும், தம்பலகாமம் மற்றும் கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவுகளில் மாவட்ட எல்லை வரை திருகோணமலை ஹபரண வீதியில் பல பிரதேங்களில்  குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் இறக்கக்கண்டி மற்றும் கும்புறுப்பிட்டி கிராமங்களில் கடற்றையை நோக்கி உள்ள பெறுமதிவாய்ந்த காணிகளில் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன.

திருகோணமலை நகரம் மற்றும் கிரேவெட் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விளாங்குளம். குச்சிவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இறக்கக்கண்டி. தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாலம்போட்டை மற்றும் பத்தினிபுரம் ஆகிய பகுதிகளும் திட்டமிட்ட குடியேற்றத்துக்கு உட்படுத்தப்படுகின்றன. 

சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித்தீவு, நவரத்னபுரம், சூடைக்குடா, கடற்கரைச்சேனை மற்றும் சம்பூர்க்களி கிராமசேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த, வதிவிட வெள்ளாமை மற்றும் தோட்ட நிலங்களுக்கு சட்டபூர்வமாக உரித்துடைய, இடம்பெயர்ந்த, 1486 சிறுபான்மைத் தமிழ் சமூகக் குடும்பத்தினர், அவர்களின் பிரதேசங்கள் அதியுயர் பாதுகாப்புப் பிரதேசம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஒரே காரணத்தினால் தமது வதிவிடங்களுக்கும் ஏனைய சொத்துக்களுக்கும் திரும்பி இயல்பு வாழ்க்கையைத் தொடங்குவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசங்களில் பல பாடசாலைகளும், இந்துக்கோவில்களும் ஏனைய கட்டிடங்களும் இருந்தன. இப்பிரதேசத்திலிருந்த சகல கட்டிடங்களும் அழிக்கப்பட்டு விட்டன.

தமக்குச் சொந்தமான இந்தக் காணிகளில் இக் குடும்பங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து அவற்றைப் பயன்படுத்தி வந்துள்ளன. நாட்டின் ஏனைய பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களுள் சிவிலியன்கள் வாழ்கின்றனர்.

பெரும்பான்மையினருக்கு சட்டம்  வேறுவிதமாகப் பயன்படுத்தப்படுகிறது. திருகோணமலை உள்ளிட்ட கிழக்கின்  அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறுபான்மை இனத்திற்குச் சொந்தமான காணிகளையும், அரச காணிகளையும் பெரும்பான்மையினர் சட்டவிரோதமான முறையில் அரசிலுள்ள சிலரின் ஒத்துழைப்புடன் கைப்பற்றி வருகின்றனர்.  இந்தச் சட்டவிரோதக் குடியேற்றம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும். இல்லையேல் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு தவிர்க்க முடியாத சில முடிவுகளை எடுக்கவேண்டி வரும்.  என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.