மீழ் குடியேற்றம் என்ற பெயரில் மகிந்த அரசு நடத்தும் கபட நாடகம்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா முகாம்களில் கம்பி வேலிக்குள்  போதுமான அடிப்படை வசதிகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது நாம் அறிந்ததே. தற்போது இவர்களை வேறு வேறு முகாம்களுக்கு இடமாற்றும் செயற்பாட்டையும் சிங்கள அரசு மீள்குடியேற்றம் என்பதற்குள் சொல்லி சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது அதாவது, வெளிநாட்டு பிரதிநிதிகள் இலங்கைக்கு வரும் சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினரை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்புகின்றோம் என்று கூறி அதற்கு  பசில்ராஜபக்ச வவுனியா வருகை தந்து வீடியோ படம் எடுத்து திருவிழாவாக குறிப்பிட்ட ஒரு தொகுதி மக்களை இடமாற்றுவார்கள் பின்னர் அதில் குறிப்பிட்ட மக்களையே சொந்த இடம் அனுப்புவார்கள்.

_44692264_mahinda_body_apமுதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை அவர்களின் மாவட்டங்களுக்கு அனுப்புகின்றோம் என்று கூறிக்கொண்டு திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறைக்கு அனுப்பப்பட்டவர்களில் குறிப்பிட்ட தொகையினர்  இன்றுவரை அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்படவில்லை. அவர்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள இராணுவ முகாம்களுக்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

2009.10.14 ம் திகதி வலயம் – 04 இல் குறிப்பிட்ட ஒரு தொகுதி மக்களின் பெயர்களை ஒலிபெருக்கியில் வாசித்து அவர்களை அவர்களது பிரதேசத்திற்கு அனுப்பப்படவுள்ளதாக, பெயர் வாசிக்கப்பட்டவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு உடனே தயாராகுமாறும் ஒலி பெருக்கியில் கூறப்பட்டது.

இவ்வாறாக பெயார்குறிப்பிட்ட மக்களின் பொருட்களை ஒரு லொறியில் ஏற்றிக்கொண்டு மக்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டு சென்ற அரச படைகள் அவர்களைக் கொண்டு புதுக்குளம் மகா வித்யாலய முகாமிலும், கோமரசங்குளம் மகா வித்தியாலய முகாமிலும் விடப்பட்டனர். புதுக்குளத்திற்கு வந்த மேற்படி மக்கள் வீதியிலே இறங்கி முகாமுக்குள் செல்ல மறுத்ததுடன் தங்களது பொருட்களை லொறியிலிருந்து இறக்க விடாமலும் தடுத்தனர்.  அச்சமயம் அதிகளவு இராணுவத்தினர் அவ் விடத்திற்கு வரவழைக்கப்பட்டு மக்கள் பலவந்தமாக அடி உதைகளின் மத்தியில் புதுக்குளம் மகாவித்யாலயத்திற்குள் கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும், சிலர் வவுனியா நகரிலிருந்து தொலைவில் சிங்கள குடியேற்றங்கள் உள்ள தர்மபுரம், சுமதிபுரம், வீரபுரம் முகாம்களுக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர். மேற்படி முகாம்களில் தர்மபுரம் முகாமானது போக்குவரத்து வசதிகள் அற்ற காட்டுக்குப் பகுதியில்  முஸ்லிம், சிங்கள ஊர்காவற்படைகளின் சுற்றுவளைப்புக்கு மத்தியில் 2009.10.16 ம் திகதி வவுனியா கச்சேரி கணக்கின் படி 1455 குடும்பங்கள் (4844 சனத்தொகை) தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள சில பெண்களை ஊர்காவற்படையினர் அரச புலனாய்வு பிரிவு போன்று வந்து கடத்தி செல்வதாகவும் இதனை அறிந்து பொலிஸில் புகார் செய்தும்  எதுவித விசாரணைகளும் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளனர் மக்கள். தர்மபுரம் முகாமானது அனுராதபுர நிர்வாக அலகிற்கு உட்பட்டு இருப்பதனால் மக்களுக்கு பயனுள்ள சில பதிவுகளை செய்யமுடியாதுள்ளதாகவும் வவுனியா புனர்வாழ்வு புனரமைப்பு உத்தியோகத்தர்களால் கூறப்பட்டும் வருகின்றது.

அதேபோல், சென்றவாரம் 56 குடும்பங்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு கொண்டு செல்வதாக பேருந்தில் அழைத்து வந்து வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் நடு இரவில் விடப்பட்டனர் அப்போது எதுவித ஆதரவும் அற்ற நிலையில் தவித்த மக்களை, சிறுவர்களை முதியோர்களை பராமரித்து வரும் வவுனியா சிவன் கோவில் நிர்வாகம் பொறுப்பெடுத்தது.

அரசாங்கத்தினுடைய மேற்படி இந் நடவடிக்கையானது இரு விடயங்களை தணிப்பதற்கே ஆகும். ஒன்று, முகாமில் உள்ளவர்கள் ஏதோயொரு வகையில் தாங்கள் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றம் செய்யப்படுகின்றனார் எனவும் எதிர்வரும் நாட்களில் தங்களையும் விட்டு விடுவார்கள் என்ற மன ஆறுதலை அடைவார்கள் இதன் காரணமாக தம் மீதான எதிர்ப்புகள்  குறைக்கப்படும் என்று அரசாங்கம் நம்புகின்றது.

முகாம்களில் உள்ளவர்கள் வெளி விடயங்களை அறிவதற்கான பத்திரிகைகள் போன்ற ஊடக வசதிகள் முகாம்களில் இல்லை. இதனால் முகாமிலிருந்து மீள்குடியேற்றம் என்று சொல்லி கொண்டுசெல்லப்படுபவர்கள் உண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்படுகின்றனர் என்றே மக்கள் நம்புகின்றனர்.

அரசாங்கத்தின் அடுத்த நோக்கம் மக்களை தாங்கள் விடுவிப்பதாக சர்வதேசத்திற்கு காட்டிக்கொள்வதாகும். இதன்போது சர்வதேச அழுத்தங்கள் குறையும் என எதிர்பார்க்கின்றது.

அத்துடன், முகாம்களில் உள்ளவர்களை அவர்களது உறவினர்கள் பொறுப்பெடுக்கும் பட்சத்தில் அவர்களை அக்குடும்பத்திடம் கையளிப்பதாக கச்சரி ஊடாக சில நடவடிக்கைகளை கையாளுகின்றது. உண்மையில் கச்சேரியால் வெளியிடப்படும் அப் படிவத்தில் உள்ள உடன்படிக்கைகளை வாசித்தவர்கள் மேற்படி குடும்பங்களை நிச்சயமாக பொறுப்பெடுக்க முன்வரமாட்டார்கள் காரணம் இவர்களை பொறுப்பெடுக்கும் குடும்பங்களுக்கு சமூர்த்தி உணவு முத்திரைகள் உள்ளடங்கலுடன் எதுவித அரச உதவிகளும் கிடைக்கப்பட மாட்டது என்பதற்கு சம்மதித்து கையொப்பம் இட்டால் மாத்திரமே முகாமில் உள்ள குடும்பங்களை பெறுப்பெடுக்க முடியும் என்ற வகையில் உள்ளது அந்தப்படிவம்.

தற்போது, முகாம்களில் உள்ள குழந்தைகள் சிறுவர்கள் சிறுமிகள் அதிகளவில் அரச வைத்தியர்களால் போசாக்கு தொடர்பாக வழங்கப்படும் றொஸ் அட்டையை பெற்று வருகின்றனர். போசாக்கின்மையால் அதிகளவில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கே மேற்படி றோஸ் அட்டை வழங்கப்படுகின்றது. இதன்படி  அட்டைகள் வழங்கப்பட்ட பிள்ளைகளிற்கு அது மட்டும் தான் ஆனால் அட்டைகான உணவுகள் கிடைப்பதில்லை  இதனால் அதிகளவில் போசாக்கின்மை நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், முகாம்களில் உள்ள மக்களில் சிலர் வயிற்றுப்பசிக்காக சிங்கள அரச புலனாய்வுத்துறையினரின் பணத்திற்கு சோரம் போய், முகாம்களில் படம் பிடிக்கும் அரச சார்பற்ற உத்தியோகத்தர்களையும், மக்களுடன் அதிகளவில் உறவாடுபவர்களையும் காட்டிக்கொடுத்தும் வருகின்றனர்.

முகாம்களில் உள்ளவர்களை சிங்கள புலனாய்வுத்துறைக்கு விலைக்கும் வாங்கி கொடுக்கும் தரகர் வேலைகளை சித்தார்த்தனின் புளோட் உறுப்பினர்களும், டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி உறுப்பினர்களும் இராணுவத்தின் சொல்லே தாரக மந்திரமாக கொண்டு இக் கீழ்த்தரமான இழிய செயலை செய்து வருகின்றனர்.

மேலும், முகாம்களில் உள்ளவர்கள் இடவசதிக்கு, நீருக்கு, உணவுக்கு, உடைக்கு, வைத்தியத்திற்கு, மற்றும் ஏனைய வசதிகளுக்காக ஏங்கித் தவிப்பதையும், எதிர்வரும் மாதங்களில் ஏற்படும்; மழை காரணமாக அவர்கள் எதிர்நோக்கப்போகும் அசௌகரியங்களையும் சொற்களின் எழுதமுடியாது.

இவ்வாறாக சிங்கள அரசாங்கமானது மக்களை விடுவிக்கின்றோம் என்று கூறிக்கொண்டு மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையும் கருத்தில் கொள்ளாது கபட நாடகத்தை நடாத்துகின்றது. அத்துடன் எதிர்கால தமிழ்ச் சந்ததிகளில் பிரிவினைகளை உருவாக்கி உடல் ஆரோக்கியமற்ற நலிவுற்ற, கல்வியற்ற, பொருளாதார வசதியற்ற சமூகமாக உருவாக்கும் வகையில் திட்டமிட்டு செயற்படுகின்றது எனலாம்.

எனவே, வெளிநாட்டு அரசாங்கங்கள், தேசிய அரசசார்பற்ற நிறுவனங்கள், உள்ளுர் அரசசார்பற்ற அமைப்புக்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வன்னி மக்களின் நிவாரணத்திற்காகவும்   அம்மக்களை வைத்து சிங்கள அரசாங்கம் சுற்றியுள்ள  முட்கம்பி  வேலிகளை நீக்குவதற்கு சிங்கள அரசாங்கத்திற்கு ஏதோவொரு முறையில் அழுத்தம் கொடுக்கவேண்டும் என கேட்டு கொள்கின்றோம்.

– தீசன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.