தமிழர் பகுதியில் சிங்களர்கள் குடியேற்றம் நடைபெறுவதாக கூறப்படுவது தவறாம்: கனிமொழி எம்.பி. கூறுகிறார்

தமிழர் பகுதியில் சிங்களர்கள் குடியேற்றம் நடைபெறுவதாக கூறப்படுவது தவறு. இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரும் கண்காணித்து வருகிறார் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

kanimoliஇலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவடைந்த நிலையில், போர்ப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் தமிழர்களை பல்வேறு முகாம்களில் இலங்கை அரசு தங்க வைத்துள்ளது.

முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை என்று பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து தமிழர் முகாம்களை நேரில் பார்வையிடுவதற்காக, மத்திய அரசின் அனுமதியுடன், தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் 10 பேர் கொண்ட குழு, கடந்த 10 ந் தேதி இலங்கை சென்றது. அவர்கள் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை பார்வையிட்டனர். அதிபர் ராஜபக்சே, பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே உள்பட பலரை சந்தித்துப் பேசினர்.

தமிழகம் திரும்பிய அந்த குழுவினர் முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலவரம் குறித்து தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இந்நிலையில், இலங்கை சென்று திரும்பிய தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள், டி.ஆர்.பாலு தலைமையில் டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

பிரதமரை சந்திப்பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. கவிஞர் கனிமொழி,

இலங்கையில் டிசம்பர் மாதம் பருவமழை தொடங்கும். அதற்கு முன்பாக, முகாம்களில் உள்ள தமிழர்களை அவரவர் சொந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும்படி இலங்கை அரசை வற்புறுத்துமாறு பிரதமரைக் கேட்டுக்கொண்டோம்.

இதனை ஏற்று இலங்கை அரசிடம் வலியுறுத்துவதாக பிரதமர் உறுதி அளித்தார். இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணி குறித்தும் தெரிவித்தோம். நாங்கள் கூறியவற்றை பிரதமர் பொறுமையாக கேட்டார். தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதாக உறுதி அளித்தார்.

தற்போது முதல்கட்டமாக 50 ஆயிரம் பேர் சொந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருவது நிவாரண பணிகளின் முன்னோட்டம் ஆகும். தமிழர் பகுதியில் சிங்களர்கள் குடியேற்றம் நடைபெறுவதாக கூறப்படுவது தவறு. இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரும் கண்காணித்து வருகிறார். விடுதலைப்புலிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை பார்வையிட எங்களை அனுமதிக்கவில்லை என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.