68,000 தமிழர்களை மறு குடியேற்றம் செய்து விட்டது இலங்கை – பாலு

முகாம்களில் இருந்த 68 ஆயிரம் தமிழர்கள் அங்கிருந்து அனுப்பப்பட்டு விட்டதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

சமீபத்தில் தமிழகத்திலிருந்து திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த பத்து எம்.பிக்கள் டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை சென்று இடம் பெயர்ந்தோர் முகாம்களைப் பார்வையிட்டு, ராஜபக்சேவையும் சந்தித்துப் பேசி விட்டு தமிழகம் திரும்பினர்.

baluஅவர்கள் பின்னர் முதல்வர் கருணாநிதியிடம் அறிக்கை ஒன்றைக் கொடுத்தனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கருணாநிதி 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் தமிழர்கள் மறு குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், 68 ஆயிரம் தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாக டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கையில் அகதிகள் முகாமில் இருந்து தமிழர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கனவே 58 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர்.

நேற்றும், இன்றும் மேலும் பலர் சொந்த ஊர்க ளுக்கு அனுப்பி வைக்கப் பட்டிருக்கிறார்கள். நேற்று யாழ்ப்பாணத்துக்கு 2 ஆயிரத்து 955 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். மன்னாருக்கு 764 பேரும், வவுனியாவுக்கு 890 பேரும் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

இன்று முல்லைத்தீவுக்கு 1,021 தமிழர்களும் யாழ்ப்பாணத்துக்கு 3,200 பேரும், வவுனியாவுக்கு 1000 பேரும், திரிகோணமலைக்கு 59 பேரும், மட்டக்களப்புக்கு 2 பேரும் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதன்படி 2 நாட்களிலும் மொத்தம் 10 ஆயிரத்து 241 தமிழர்கள் முகாம்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதையும் சேர்த்தால் 68 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சொந்த இடங்களுக்கு திரும்பி இருக்கிறார்கள்.

இலங்கை கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அனைவரும் முகாம்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர் என்றார் டி.ஆர்.பாலு.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.