யுத்தக்குற்ற நீதிமன்ற விவகாரத்தில் திட்டமிட்டு செயற்பட்டு வெற்றிபெறுவோம்

திட்டமிட்டுச் செயற்பட்டு, சதிகாரர்களை இனங்கண்டு கடந்த காலங்களில் வெற்றிகளை பெற்றதைப்போன்று சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்ற விவகாரத்திலும் திட்டமிடப்பட்ட ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றிபெறுவோம் என நம்புகின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

makindaநாட்டின் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை நேற்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்திய ஜனாதிபதி அங்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் கூறியதாவது: தொழிலாளர் வர்க்கத்துக்கு தொழில் ரீதியான பிரச்சினைகள் உள்ளன.

அவற்றுக்கு நியாயமான தீர்வுகள் அவசியம். அரசாங்கம் என்ற ரீதியில் முடியுமானவரை நடவடிக்கைகளை மேற்கொள்வோம். எனினும் தொழிற்சங்கங்களின் போர்வையில் சர்வதேச சதித்திட்டங்கள் வெளிவர சாத்தியங்கள் உள்ளன. எனவே தொழிற்சங்கங்கள் அவதானத்துடன் இருக்கவேண்டும். முதலாவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் விசேட அமர்வு விவகாரம் வந்தது.

 அதனையடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை விவகாரம் வந்தது. அதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை மற்றும் பிரஸ்ஸல்ஸ் விவகாரம் உருவெடுத்தது. மேலும் இலங்கை இராணுவத்தினர் பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துவதக குற்றஞ்சாட்டப்பட்டது. எனினும் சதிகாரர்களை இனம் கண்டு திட்டமிட்ட ரீதியில் அவற்றில் வெற்றிகண்டோம்.

எனவே தற்போது எழுந்துள்ள சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்ற விவகாரத்திலும் சதி காரர்களை இனம்கண்டு திட்டமிடப்பட்ட ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றிபெறுவோம் என்று நம்புகின்றேன்.

எதிர்காலத்தில் நாட்டில் அத்தியாவசிய பொருட்களில் பற்றாக்குறையை ஏற்படுத்தி அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உட்படுத்தும் முயற்சி ஒன்று தற்போது காணப்படுகின்றது. நாடு பெற்றுக்கொண்ட முக்கியத்துவம் மிக்க வெற்றியின் ஒரு பகுதியினரான தொழிலாளர் வர்க்கத்தின் மன உறுதியை தகர்த்து அரசியல் இலாபம் தேட முயற்சிக்கும் வங்குரோத்து அரசியல்வாதிகளின் சதித்திட்டங்களுக்குள் சிக்கிவிடவேண்டாம் என்று கோருகின்றேன்.

நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தில் அனைத்து தொழிலாளர் வர்க்கத்தினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம். மக்களின் ஒத்துழைப்பு எமக்கு கிடைக்கும் வரை எந்த சதித்திட்டத்தாலும் நாட்டின் வெற்றிப்பயணத்தை திசைதிருப்ப முடியாது.

அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன ஏ.எச்.எம். பௌசி டலஸ் அழகப்பெரும ரஞ்சித் சியம்பளாபிட்டிய மேர்வின் சில்வா மற்றும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.