நல்லாட்சியை இலக்காகக் கொண்டு வளமான கூட்டணியை களமிறக்குவோம்

ஜனநாயகம், நல்லாட்சி, தேசிய சமாதானம் மற்றும் தேசிய அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட வளமான கூட்டணியொன் றை எதிர்வரும் தேர்தல்களின் போது களமிறக்குவோம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

jvp-logoநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பிற்கான நடவடிக்கைகளை ஐ.தே.க. செயல்வடிவில் காட்டினால் மாத்திரமே அதனை பொதுமக்கள் நம்புவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே சோமவன்ச அமரசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, தற்போதைய அரசாங்கத்தின் யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டதனாலும் ஜனநாயக விரோத செயற்பாடுகளும் காணப்பட்டமையால் எதிர்கால அரசியலுக்காக வளமான ஒரு கூட்டணி அமைப்பது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே கலந்தாலோசித்து உள்ளோம்.

முடிவுகள் எடுப்பதே தவிர புதிதாக கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டியதில்லை. எமது கூட்டணியின் நோக்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பு மற்றும் நல்லாட்சி என்பவையேயாகும். ஐ.தே.க வினால் கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு எதிராக தற்போது ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐ.தே.க வினர் குரல் கொடுக்கின்றனர். ஆனால் ஜே.வி.பி அப்போதே இம்முறையினை எதிர்த்து போராடியது.

எவ்வாறாயினும் ஐ.தே.க.வின் மீது பொதுமக்களுக்கோ ஏனைய அரசியல் கட்சிகளுக்கோ நம்பிக்கை ஏற்பட வேண்டுமாயின் எதிர்ப்புக்களை வார்த்தைகளில் வெளிப்படுத்தாது செயல்வடிவில் காண்பிக்க வேண்டும்.

நிச்சயமாக எதிர்வரும் தேர்தல்களின் பின்பு நாட்டில் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்டு நல்லாட்சியே ஏற்பட வேண்டும். ஆனால் மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலை நடத்த இந்த அரசாங்கம் முயற்சிப்பது மக்கள் ஆணையை மீறும் செயலாகும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.