விடுதலைப் புலிகளால் நாட்டிற்கு ஏற்பட்ட சவாலைவிட அதிகளவான சவால் ராஜபக்ஷ சகாக்களினால் ஏற்பட்டுள்ளது

ராஜபக்ஷ அரசாங்கத்தின் வாழைப்பழ குடியரசு பொருளாதார நிகழ்ச்சி நிரல் நாட்டு மக்களைக் கொல்லாமல் கொல்வதாகவும் பிரபாகரனினால் நாட்டின் சட்டத்திற்கும் சமாதானத்திற்கும் ஏற்பட்ட சவாலைவிட அதிகளவான சவால் ராஜபக்ஷ அரசியல் சகாக்களினால் உருவாக்கப்பட்ட புதிய வர்த்தக வகுப்பினால் உருவாக்கப்பட்டிருப்பதாக ஊழல் கண்காணிப்பின் பிரதான இணைப்பாளர் சட்டத்தரணி ஸ்ரீலால் லக்திலக்க தெரிவித்துள்ளார்.

question-mark1a copyகொழும்பு தேசிய நூலகத்தின் கேட்போர் கூட்டத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
 
உலகப் பொருளாதார மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட போட்டி நிறைந்த உலகப் பொருளாதார நிலைமைகள் தொடர்பான அறிக்கையின்படி இலங்கையில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் 10 காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் முதலாவது காரணம் 20 வீத பண வீக்கம் எனவும் இதில் 1.5 வீதம் ஊழல் வீண் விரையத்திற்காக ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த ஸ்ரீலால் லக்திலக்க தான் பல்வேறு ஊழல் மோசடிகள் குறித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் நான்கு முறைப்பாடுகளைச் செய்திருந்த போதிலும் அந்த ஆணைக்குழு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனக் குறிப்பிட்டுள்ளார்.
 
அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சக்வித்தி, செலிங்கோ, தண்டுவன் முதலாளி ஆகிய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட மோசடிப் பணத்தை அரசாங்கம் தனியார் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட முயற்சித்தது. இதற்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும்.
 
இவற்றைத் தேடிப்பார்ப்பதற்காக அரசாங்கத்திற்குள் இருக்கும் கட்டமைப்புக்களில் நிலவும் குறைபாடுகள் காரணமாக இந்த மோசடிகள் வெகுதூரம் சென்றன. செலிங்கோ ஸ்ரீராம் கியோரிட் நிறுவனத்தின் கணக்கு இதுவரை கணக்காய்விற்கு உட்படுத்தப்படவில்லை. இப்படியிருக்கும் போது அந்த நிறுவனத்திற்குரிய செலிங்கோ சிக்கியூரிட்டி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை மத்திய வங்கி 100 மில்லியன் ரூபாவிற்கு அரசியல் வாதியின் புதல்வர் ஒருவருக்கு விற்பனை செய்யவுள்ளது. இந்த நிறுவனத்திற்கு 286 மில்லியன் சொத்துக்கள் இருக்கின்றன.
 
அதேவேளை, செலிங்கோ ஸ்ரீராம் நிறுவனத்திற்கு 1.7 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் இருக்கும் நிலையில் இந்தக் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ள மத்திய வங்கி தயாராகி வருவதாகவும் ஸ்ரீலால் லக்திலக்க குறிப்பட்டுள்ளார்.
 
அதேவேளை, அரசாங்கம் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து தேசிய சொத்துக்களைக் கொள்ளையிடும் யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வதாக ஊழல் கண்காணிப்புக் குழுவின் இணைப்பாளரான சட்டத்தரணி ரவி ஜயவர்தன இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
 
ஊழல் மோசடிகளை இல்லாமல் செய்வதற்காக ஊழல் கண்காணிப்பு அமைப்பு முன்வந்த சந்தர்ப்பத்தில் தேசப்பற்றாளரான விமல் வீரவங்ச இது சூழ்ச்சியாளர்கள் சிலரின் வேலையெனக் கூறினார். இந்த ஊழல் மோசடிகளின் சுமை தற்போது மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஊழல் இடம்பெற்ற நிறுவனங்கள் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. எவ்வாறாயினும், தேசப்பற்றாளர் வீரவன்;ச தனது புதிய கட்சியின் ஆரம்ப பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது கோடிக்கணக்கான நிதியை நாசம் செய்து ராஜபக்ஷ அரசாங்கம் யுத்த வெற்றிப் போர்வையில் அபகீர்த்தியை மூடிமறைத்துக்கொள்ள முயற்சிப்பதாக விமல் வீரவங்ச கூறியதாக சுட்டிக்காட்டிய ரவி ஜயவர்தன, அவர் அரசாங்கத்துடன் இணைந்த பின்னர் யுத்தத்தின் பின்னர் உடனடியாக மக்களுக்கு வளங்களைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தமை இன்று கேலிக்கூத்தாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
பொய்யான தேசப்பற்றாளர்கள் யார் என்பது குறித்து தற்போது மக்கள் விளங்கிக் கொண்டிருப்பதாகவும் இதற்குப் பின்னர் விமல் வீரவங்சவிற்கு எதிராகவே நாட்டு மக்கள் முனைப்புக்களை மேற்கொள்வர் எனவும் ரவி ஜயவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.