உரிய நேரத்தில் பிரபாகரன் வருவார்: வைகோ

தமிழின யுத்தம் தொடரும், அதனை பிரபாகரன் வழி நடத்துவார். உரிய நேரத்தில் பிரபாகரன் வருவார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
 
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம் தஞ்சை ஆப்பிரகாம் பண்டிதர் சாலையில் இன்று காலை நடைபெற்றது.

Vaiko9இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வைகோ, இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட 20 ஆயிரம் உடல்கள் சரிவர மண்ணில் மூடப்படாத நிலையில் எலும்புகள் மேலே நீட்டிக்கொண்டிருக்கும் செய்தியை லண்டன் டைம்ஸ் பத்திரிகை வெளியிடுகிறது. ஆனால், இங்கு பத்திரிகைகளை மிரட்டி தனக்கு ஆதரவாக வைத்துள்ளனர்.

முள் கம்பி வேலிக்குள் அடைப்பட்டு கிடக்கின்ற ஈழத் தமிழர்களை வெளியேற்றப்படுவது மட்டும் தீர்வாகாது. அவர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். ஈழத் தமிழர்களை முள் வேலிக்குள் அடைபடும் சூழ்நிலையை ஏற்படுத்தியது இந்திய அரசு. ஆயுத உதவி செய்ததும் இந்திய அரசு.  அதனால் தான் புலிகள் தோற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும். போர் நிறுத்தம் வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது பாரபட்சமின்றி அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்தன. அப்போது டெல்லி வந்த ராஜபக்சே பிரதமரை சந்தித்த பின்னர் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, இலங்கையில் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. விடுதலைப்புலிகளை அழித்து விட்டு தான் மறுவேலை என்றார்.

தமிழின யுத்தம் தொடரும், அதனை பிரபாகரன் வழி நடத்துவார். உரிய நேரத்தில் பிரபாகரன் வருவார். ஈழத் தமிழர்களுக்கு தனி ஈழம் ஒன்றேதான் தீர்வு என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.