முள்வலி திருமாவளவனின் ரத்தப்பதிவு ‐ 1

அக்டோபர் மாதம் 8ம் தேதி. சிதம்பரம் தொகுதியில், இளைஞர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு  முகாம், மாணவர்களுக்குக் கட்டணமில்லா  நடமாடும் கணினிப் பயிற்சியகம்  ஆகிய வற்றின் தொடக்க விழா. மேடையில் தம்பிகளின் வழக்கமான நெரிசலில் மூச்சுத் திணறிக்கொண்டிருந்தேன்.

News_thirumaகூட்டத்தின் இரைச்சலில் என் கைபேசி ஒலித்தது, சரியாகக் கேட்கவில்லை. அதைத் தொடர்ந்து அந்தத் தகவல் அவசரமாக என்னிடம் வந்து சேர்ந்தது. தமிழக முதல்வர் கலைஞர் பேச விரும்புகிறார் என்று சொன்னார்கள். என்னவோ ஏதோ என்கிற பதற்றம் என்னைத் தொற்றிக்கொண்டது. அவரோடு பலமுறை நான் தொலைபேசியில் பேசியிருக்கிறேன் என்றபோதிலும் அப்போதிருந்த சூழ்நிலையில் என் படபடப்புக்கு  ஒரு காரணம்  இருந்தது.

ஆகஸ்ட் 17 அன்று எனது பிறந்த நாளில் வாழ்த்து பெற கலைஞரைச் சந்தித்திருந்தேன். அந்த நாளை எழும் தமிழீழம் என்ற தலைப்பில் ஒரு மாநாடாக ஒழுங்கமைத்திருந்தோம். அந்த மாநாட்டையட்டி தமிழகமெங்கும் மேதகு பிரபாகரன் படம் பொறித்த விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. காவல் துறையினர் அவற்றையெல்லாம் அப்புறப்படுத்தினர். சுவர் விளம்பரங்களையும் கூட  அவர்கள் விட்டுவைக்க வில்லை. அன்று, நான் வந்திருப்பது வாழ்த்துப் பெறு வதற்கு என்று தெரிந்திருந்தாலும், முதல்வர் என்னைக் கடிந்துகொள்ளத் தயங்கவில்லை. அவர் என்மீதும் விடுதலைச் சிறுத்தைகளின் மீதும் அக்கறை கொண்டவர்தான். அந்த உரிமையோடு  கண்டிக்கிறார் என புரிந்ததால், நான் அதை நெருடலின்றி  ஏற்றுக்கொண்டேன். விமர்சித்த கையோடு எனக்குப் புத்தகம் ஒன்றைப் பரிசளித்து வாழ்த்தவும் செய்தார் முதல்வர்.

அதன்பிறகு  ஒரு சில வாரங்கள் இடைவெளி விழுந்திருந்தது. தி.மு.கவுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்குமான உறவு குறித்து ஊடக வட்டாரங்களில் வெவ்வேறு விதமான செய்திகளும் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்த நேரத்தில்தான் முதல்வர் பேச விரும்புகிறார் என்கிற தகவல் வந்தது. அதனால்தான் அந்த மெல்லிய தயக்கம்.

தலைமைச் செயலகத்தில் இருந்த முதல்வரோடு தொடர்பு கொண்டபோது  மிகவும் இயல்பாகவே பேசினார்.  இந்திய அரசின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் காலையில் தம்மிடம் பேசியதாகச் சொன்னார். மறுபடி எனக்குள் தயக்கம். அக்டோபர் 6 அன்று கடலூரில்  நடந்த கடனுதவி வழங்கும் விழா ஒன்றில் அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் பேசியது என் நினைவுக்கு வந்தது. கடலூர் நிகழ்ச்சியில், எனக்கும் கே.எஸ்.அழகிரி அவர்களுக்கும் இடையில் ஒரே ஒரு முரண்பாடு தான் உண்டு. அது என்னவென்றால், நான் தீவிரமாய் விடுதலைப் புலிகளை ஆதரிப்பேன். அவர் தீவிரமாய் எதிர்ப்பார். அவ்வளவுதான் என்று நான் பேசியிருந்தேன். உள்துறை அமைச்சரை மேடையில் வைத்துக் கொண்டே  நீங்கள் இப்படிப் பேசலாமா? உங்கள் உறவு பாதிக்காதா? என்று அப்போதே ஊடகவிய லாளர்கள் கேட்டனர். அது தொடர்பாக, ப.சிதம்பரமோ கே.எஸ்.அழகிரியோ மனக்குறையாக ஒன்றும் சொல்லவில்லை. எனினும் முதல்வரிடத்தில் அதுகுறித்துப் பேசியிருப்பாரோ, அதைப் பற்றித்தான் முதல்வர் ஏதோ பேசப் போகிறாரோ என்றெல்லாம் அந்த ஒரு நொடியின் பின்னப் பொழுதில் எண்ண அலைகள் பரவின.

ஆனால், அவர் அதைப்பற்றியும் கேட்கவில்லை. வரும் 10‐ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை செல்வது சம்பந்தமாக ப.சிதம்பரம் என்னிடம் பேசினார். அதன்படி, தி.மு.கவில் இருந்தும் காங்கிரஸில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்கிறார்கள். தி.மு.கவில் டி.ஆர்.பாலு, கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா, ஹெலன் டேவிட்சன் ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெறுகிறார்கள்… தி.மு.க. சார்பில் இடம்பெறும் ஆறாவது உறுப்பினர் யார் தெரியுமா? என்று திடீரென ஒரு புதிரைப் போட்டார்.

அவர் என்னைச் சொல்கிறார் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. என்னை இந்தக் குழுவில் இணைப்பதில் அவருக்குப் பல சங்கடங்கள் இருக்கும் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் நான் என்னைச் சொல்கிறார் என்று அப்போது யூகிக்கவில்லை. ஆனால், அவர் என் பெயரைத்தான் சொன்னார், இலங்கை செல்லும். தி.மு.க. குழுவின் ஆறாவது  உறுப்பினர் திருமாவளவன் என்று சொல்லிச் சிரித்தார்.

கிடைத்திருப்பது அரிய வாய்ப்பு என்று பளிச்செனப் புரிந்தது. மனம் நெகிழ்ந்தது. பற்றி எரிந்துகொண்டிருந்த  அடிவயிற்றில் பால் வார்த்தது போல் இருந்தது. உன்னை வேறு ஒரு கட்சியின் உறுப்பினராய்ப் பிரித்துப் பார்க்காமல் எங்களில் ஒருவனாகவே கருதுகிறோம் என்று முதல்வர் கூறியதில் இருந்த நெருக்கமும் தோழமையும் புரிந்தது. ஆனாலும் இன்னொரு செய்தியை அழுத்தமாகக் கூறினார்

நல்ல பிள்ளையாகப் போய்விட்டுத் திரும்ப வேண்டும்.

வாய்ப்பு பெரியது. அவர் சொன்ன தன் பொருளையும் நான் யூகித்துக்கொண்டேன். அங்கே நடக்கும் சந்திப்புகளின்போது யாருக்கும்  எந்தவொரு சங்கடமும் நேராத வகையில் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும்… அங்கே என்ன நடந்தாலும் உணர்ச்சிகள் கட்டுமீறிப் போகவிடக்கூடாது அதுதானே..?

2004 ம் வருடம்  இதே  இலங்கை மண்ணுக்கு நெஞ்சுகொள்ளாத பெருமையோடு சென்ற நினைவுகள் என்னை உடனே ஆக்கிரமித்தன. அங்கே ஒரு இணையற்ற தலைவனுடன் அமர்ந்து, இலங்கைத் தமிழினத்தின் எதிர்காலம் குறித்து நடத்திய கனமான விவாதங்கள் வந்து அலையாக மோதின. அன்றைக்கு என் சொந்தங்களைக் காண உயிரைப் பணயம் வைத்து செய்த பயணம் அது. அப்போது என் சொந்த தாய்மண்ணில் கால்வைத்தது போன்ற உணர்வு என்னுள் எழுந்தது. அன்றைக்கு எனக்கு அந்த மண்ணில் அளிக்கப்பட்ட வரவேற்பு, என் சொந்தங்களின் பாசம் கலந்த உணர்வுபூர்வமானதாக இருந்தது. அந்தப் பாசத்தோடு அங்கே சென்று திரும்பியதற்கும், இப்போது கூட்டணிக் குழுவாக அரசு மரியாதையுடன் செல்லும்போது நிலவுகிற சூழ்நிலைக்கும்தான் எத்தனை வேறுபாடுகள். இப்போது நான் அங்கு சென்றபோது அளிக்கப்பட்ட வரவேற்பில் முழுக்க முழுக்க வெறுமையும் போலித்தனமுமே குடிகொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. என் தமிழ்ச் சொந்தங்களைப் பார்க்கப் போகிறேன்… எண்ணற்ற இன்னல்களில் சிக்கி, இறுதி நம்பிக்கைகளை இழந்து, எந்த திசையிலிருந்தாவது கடைசியாகவேனும்  ஓர் உதவிக் கரம்  நீளாதா என்று முள்வேலிகளுக்குப்  பின்னால் வலியோடு  காத்திருக்கும்  அந்த மக்களின் கண்ணீரைத் துடைக்க முடிகிறதோ இல்லையோ… அவர்களுக்கு சில ஆறுதல் மொழிச் சொல்லவேனும் இப்போது வாய்ப்பு அமைந்ததே… என்ற எண்ணம் மட்டுமே என்னுள் பொங்கியது.

குழுவாகத்தான் கிளம்பினோம். ஆனால், நான் அந்த மேடையின் நெரிசலிலும் தனித்து விடப்பட்டது போல் உணர்ந்தேன்.

அக்டோபர் 9…

கோபாலபுரத்தில் முதல்வரை இலங்கைப் பயணக் குழு நேரில் சந்தித்தது. அப்போது குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, முதல்வர் முன்னிலையில் சில விவரங்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். அங்கே போய் யார் யாரைப் பார்க்க வேண்டும், எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று அவர் சொல்லிக்கொண்டே வந்தபோது… காங்கிரஸ் உறுப்பினர் கே.எஸ்.அழகிரி இடைமறித்து, இவையெல்லாம் திருமாவளவனுக்காகச் சொல்லப்படுவதுதானே.. என்றார். எல்லோரும் என்னையே பார்த்தார்கள். நானும் அவர்களோடு அந்த கணத்தின் நகைச்சுவைபோல அதை பாவித்துச் சிரித்தாலும், நெஞ்சம் கனத்து விம்மிக் கொண்டிருந்தது.

நடந்து முடிந்தவை குறித்து நெஞ்சு விம்மிக்கொண்டே விமானத்தில் பறந்தது. இந்த உலகில் ஒருவருக்குக்கூடவா நெஞ்சிலே சொட்டு ஈரமில்லை? கடைசிப் பொழுதுகளிலாவது மனிதநேய அடிப்படையில் போரை யாரேனும் தடுத்திருக்கவே முடியாதா? உலகப் பந்தின் ஒரே ஒரு நாட்டுக்குக் கூடவா எம் தமிழ்ச் சொந்தங்களைக் காப்பாற்ற மனமில்லாமல் போய்விட்டது?

எல்லாமே தலைகீழாய் மாறிப் போனதே…. வன்னி நிலம் வதை நிலமானதே… மனிதநேயம் மரித்து வீழ்ந்ததே..

உலகில் உருவான தமிழர்களின் ஒரே தேசமான தமிழீழம், பகைக் கும்பலின் கைகளுக்குப் பறிபோன நிலையில்… வல்லாதிக்க வெறிபிடித்த நாடுகளின் கூட்டு அரசுப் பயங்கரவாதத்தால் வீரஞ்செறிந்த ஒரு விடுதலை இயக்கம் சில்லுச் சில்லாய் நொறுங்கிச் சிதறிய நிலையில்… அடுக்கடுக்கான எத்தனை போராட்டங்கள் பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் மாநாடுகள் சாகும்வரை உண்ணாநிலை அறப்போர்.

அதன் விளைவாக தமிழகத்தில் அரசியல் பெருநெருப்பு மூண்டபோதும், எம் சகோதரர்களுக்கு தோள் கொடுக்க ஒரு நாதியில்லையே என்கிற ஆற்றாமையில் அல்லவா புழுங்கித் தவித்தோம். இயலாமையால் பதைக்கும் மனதோடு வேதனையில் வீழ்ந்து கிடந்த நிலையில், எல்லாமே அல்லவா முடிந்து போனது.

இதோ, இப்போது அங்கே செல்வதற்கு ஓர் வாய்ப்பு. ஆனால், நாங்கள் கிளம்புகிறபோதே பாழாய்ப்போன  அரசியல் விமர்சனங்களும் கிளம்பிவிட்டது. எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்கள் அக்குழுவில் யாரும் இடம்பெறவில்லை. கடுமையான விமர்சனங்களுக்குக் கேட்கவா வேண்டும்?  உண்மை நிலைமைகள் வெளிச்சத்துக்கு வராது. சர்வதேச நெருக்கடிகளிலிருந்து  ராஜபக்ஷேவைக் காப்பாற்றுவதற்காக  இந்திய அரசு நடத்தும் நாடகம் இது. அதற்குத் தமிழக அரசு துணை நிற்கிறது  என்றும் எதிர்க்கட்சியினர் தாறுமாறாக அறிக்கைகளை வெளியிட்டனர். தேர்தலின்போது தி.மு.க காங்கிரஸ் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளும் இடம்பெற்றதனால், அ.தி.மு.க. கூட்டணியினருக்கு  விடுதலைச் சிறுத்தைகளின் மீது கடுமையான ஆத்திரம். ஈழப் பயணக் குழுவில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெற்றதைச் சாக்காகக் கொண்டு மனம்போன போக்கில் எங்களையும் விமர்சிக்கத் தொடங்கினர்.

இதற்கு நடுவே  பாது காப்பு காரணங்கள் கருதி இப்பயணத்தைத் தவிர்ப் பது நல்லது  என்கிற கருத்தை விடுதலைச் சிறுத்தை தோழர்கள் முன்வைத்தனர்.  ராஜீவ் காந்தியையே ராணுவ அணி வகுப்பின் போது  துப்பாக்கிக் கட்டையால் அடித்துக் கொல்ல முயற்சித்தவர்கள் சிங்களக் காடையர்கள். அங்குள்ள அரசின் அனுமதியோடு சென்றாலும்கூட, அவர்கள் எந்த நிலைக்கும் சென்று உயிருக்கு உலை வைக்கும் வாய்ப்பு உண்டு. சுட்டுத் தள்ளிய பிறகு ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி சமாளிக்கவும் வாய்ப்புண்டு. தமிழ் அமைப்புகளின் மீது பழிபோட்டுத் தப்பிக்கவும் வாய்ப்புண்டு. குறிப்பாக, இந்திய அரசையும் சிங்கள அரசையும் கடுமையாக விமர்சிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் மீது இந்திய ஆட்சியாளர்களுக்கும் ஆத்திரம் உள்ளது. எனவே இந்தப் பயணத்தை தவிர்ப்பதே நல்லது  என்றனர் சிறுத்தைகள்.

எதிர்க்கட்சிகளின் ஆத்திரம், விடுதலைச் சிறுத்தைகளின் ஐயம் இவற்றையெல்லாம் தாண்டி… தமிழினத்தை அழித்தொழிக்கும் இனப்பகைவர்களையும் இனத் துரோகிகளையும் நேரில் சந்திக்கும்போது உணர்ச்சிகளை எப்படி கட்டுப்படுத்துவது என்பதே என் முக்கிய சிந்தனையாக இருந்தது. என்னைச் சோதிப்பதற்கென்றே இலங்கை மண்ணில் அடுத்தடுத்து அரங்கேறின காட்சிகள்… சம்பவங்கள்… ரத்தம் கசியும்…

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.