போர் நிறுத்தம் : தி.மு.க. அரசின் வினோத விளக்கம்!

14pg3-4இலங்கையி்ல் விடுதலைப் புலிகளை ஒழிக்கிறேன் என்று கூறிக்கொண்டு தமிழர்களை இனப் படுகொலை செய்துவரும் சிறிலங்க அரசிடம் போரை நிறுத்து என்று நேரடியாக இந்தியா கூற முடியாது என்று கூறி தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் கூறியுள்ள விளக்கம் வினோதமாக உள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மீது நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், அதன்மூலம் மட்டுமே நாளும் கொன்று குவிக்கப்பட்டுவரும் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற முடியும் என்று வலியுறுத்தினர்.

webdunia photo FILE
இதற்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சரும், பேரவை முன்னவருமான பேராசிரியர் க. அன்பழகன், சிறிலங்க அரசிடம் போரை நிறுத்து என்று அண்டை நாடான இந்தியா நேரடியாக கூறினால் அதற்கு (உலக நாடுகள்) உள்நோக்கம் கற்பிக்கப்படும் என்றும், டென்மார்க், நார்வே, அமெரிக்கா போன்ற நாடுகள் தலையிட்டால் உள்நோக்கம் கற்பிக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்தியா நேரடியாக அவ்வாறு கூறமுடியாத நிலையில், உலக நாடுகள் சேர்ந்து இலங்கையில் தமிழினம் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டுமென்று மத்திய அரசு மேலும் முயற்சிக்க வேண்டுமென்று இந்த அரசின் மூலம் வலியுறுத்துகிறேன் என்றும் நிதியமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் தமிழக அரசியலில் அனுபவமிக்க மூத்த அரசியல்வாதி, மூத்த அமைச்சர், ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதன் தலைவரும், தமிழக முதலமைச்சருகான கருணாநிதிக்குப் பிறகு பொதுச் செயலராக பொறுப்பில் உள்ள இரண்டாவது பெரிய தலைவர். அப்படிப்பட்ட பொறுப்புமிக்க அமைச்சர் அன்பழகன், தமிழக மக்களும், அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் தொடர்ந்து வலியுறுத்தியும் போர் நிறுத்தம் பற்றி சிறிலங்க அரசிடம் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசாத மத்திய அரசிற்கு மேலும் ஒரு கோரிக்கை விடுத்திருப்பது ஆச்சரியமாகவுள்ளது.

சிறிலங்க அரசிடம் போரை நிறுத்து என்று இந்தியா வலியுறுத்தினால் அதற்கு உள்நோக்கம் கற்பிக்கப்படும் என்று எப்போது மத்திய அரசு கூறியது? ஒருவேளை தி.மு.க. அரசு அவ்வாறு கருதுவதாக இருந்தால் இதுவரை அது எடுத்த நடவடிக்கை எந்த அடிப்படையில்? என்ற கேள்வியும் எழுகிறது.

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது ஏன்?

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு ஈழத் தமிழினத்தை திட்டமிட்டு அழித்து வருகிறது சிறிலங்க அரசு என்று அக்டோபர் 4ஆம் தேதி தி.மு.க. சார்பில் மயிலை மாங்கொல்லையில் நடந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி பேசினார்.

போரை நிறுத்துமாறு சிறிலங்க அரசை நிர்பந்தியுங்கள் என்று அன்றைய தினம் தி.மு.க. உயர்மட்டக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அனுப்பி வைத்ததாகவும் அக்கூட்டத்தில் முதலமைச்சர் தெரிவித்தார்.

அதுமட்டுமல்ல, “இன்றைக்கு நாங்கள் விடுக்கிற வேண்டுகோளை (போர் நிறுத்தத்தை) சிறிலங்க அரசை வலியுறுத்தி நிறைவேற்றுங்கள், அது நிறைவேறவில்லை என்றால் பிறகு நாங்கள் எடுக்கும் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக நில்லுங்கள்” என்று கருணாநிதி பேசினார்.

தாங்கள் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை நடுவ‌ண் அமைச்சர் டி.ஆர். பாலு அன்றைக்கே பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து அளித்தார் என்றும், இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுக் கிடக்கும் புகைப்படங்களை பிரதமரிடம் அமைச்சர் பாலு காட்டியதாகவும், அதைப் பார்த்த பிரதமர் அப்போதே தன்னிடம் பேசியதாகவும் அந்தக் கூட்டத்தில் கருணாநிதி கூறினார். இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முழு முயற்சியை மத்திய அரசு எடுக்கும் என்று பிரதமர் தனக்கு உறுதியளித்ததாகவும் கூறினார்.

அப்போது எந்த அடிப்படையில் உறுதியளித்தார் பிரதமர்? உறுதியளித்தும் என்ன காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கவில்லை? பிரதமரை யார் தடுத்தது?

அடுத்த 10 நாட்களில் – அக்டோபர் 14ஆம் தேதி தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உடனடியாகபோர் நிறுத்தம் செய்து, அப்பாவித் தமிழர்களின் படுகொலையை நிறுத்த மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று அல்லவா வலியுறுத்தப்பட்டது? இரண்டு வாரத்தில் போர் நிறுத்தம் நிகழவில்லையென்றால் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்று அந்தத் தீர்மானத்திலேயே கூறப்பட்டதே?

சிறிலங்க அரசை ‘போர் நிறுத்தம் செய்’ என்று இந்தியாவால் நேரடியாக வலியுறுத்த முடியாது என்று அப்போது (அந்த 10 நாள் இடைவெளியில்) மத்திய அரசு தெரிவிக்கவில்லையா? அது அந்த நாட்டின் இறையாண்மையில் தலையிடுவதாகும் என்று இன்றைக்கு கூறுகிறாரே மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், அதனை அன்றைக்கு தமிழக அரசிற்கு ஏன் தெரிவிக்கவில்லை? இலங்கைத் தமிழர் பிரச்சனையில் 1956ஆம் ஆண்டு முதல் அக்கரை காட்டி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத்தான் இதுவெல்லாம் தெரியவில்லையா?

சரி, அப்போது இதெல்லாம் தமிழக அரசிற்கும் தி.மு.க. தலைமைக்கும் தெரியவில்லை என்று வாதத்திற்கு ஏற்றுக் கொண்டால் கூட, இரண்டு வார கெடு முடிவதற்குள் சென்னைக்கு ஓடி வந்த அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சிறிலங்க அரசை இந்தியா நேரடியாக வலியுறுத்த முடியாது என்றும், ஒரு தரப்பை மட்டும் போர் நிறுத்தம் செய் என்று எப்படி வலியுறுத்துவது என்றும் தன்னிடம் அவர் விளக்கமளித்ததாக செய்தியாளர்களிடமே முதலமைச்சர் கருணாநிதி கூறினாரே, அப்போது கூட நார்வே நாட்டின் வாயிலாக போர் நிறுத்தம் செய்ய இந்தியா முயற்சி எடுக்கும் என்றுதானே முதல்வர் விளக்கமளித்தார்.

அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், முதலமைச்சரும் அளித்த விளக்கத்தினை கண்ட பிறகு தாங்கள் போர் நிறுத்தம் செய்ய தயாராக உள்ளதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்ததே? ஆனால் மறு தரப்பை (சிறிலங்க அரசை) இந்தியா ஏன் வலியுறுத்தவில்லை?

அதுமட்டுமல்ல, உண்மையிலேயே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற அக்கரை இந்திய அரசிற்கு இருந்திருக்குமேயானால் அது நார்வே நாட்டை தொடர்பு கொண்டு பேசியதா? அல்லது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை தொடர்பு கொண்டு இது குறித்து விவாதித்ததா?

அதுசரி, இந்தியாவால் நேரடியாக போர் நிறுத்தம் செய் என்று வலியுறுத்த முடியாது என்று தெரிந்திருந்தும் மீண்டும் மீண்டும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது ஏன்? அந்த அய்யகோ என்ற இறுதித் தீர்மானம் எதற்கு, யாரை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டது?

அக்டோபர் மாத துவக்கம் முதல் ‘போரை நிறுத்து’ என்று தொடர்ந்து தமிழகம் குரல் கொடுத்து வருகிறதே, அதற்கு மத்திய அரசு அப்படி ஒரு முயற்சி எடுப்பதாக என்றைக்காவது விளக்கமளித்தது உண்டா? தி.மு.க. அரசிற்கு தங்கள் ‘சங்கடங்களை’ விளக்கி அதிகாரப்பூர்வமாக கடிதம் ஏதும் எழுதியது உண்டா?

இலங்கைக்கு அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பயணம் மேற்கொண்ட போது அவர் போர் நிறுத்தம் பற்றித்தான் பேசப் போகிறார் என்பதுபோல ஒரு பரபரப்பை உருவாக்கியது ஏன்? அவர் போர் நிறுத்தம் பற்றியே பேசாமல் திரும்பியது ஏன்? அவருடைய பயணத்தில் போர் நிறுத்தம் பற்றி ஏன் பேசவில்லை என்று தி.மு.க. அரசு கேட்டதா? இல்லையே?

என் இன மக்கள் அங்கே கொத்துக் கொத்தாக கொல்லப்படுகின்றனர், சிறிலங்க இனவாத அரசு கொன்று குவிக்கிறது என்று பொது மேடையிலும், சட்டப் பேரவையிலும் பேசிய தமிழக முதலமைச்சர் கருணாநிதி, அந்நாட்டுடன் ‘இதமான நெருக்கமான ஆழமான’ உறவு ஏற்பட்டுள்ளது என்று சிவ் சங்கர் மேனன் பயணத்தின் முடிவில் சொல்லப்பட்டதற்கு என்ன எதிர்ப்பு தெரிவித்தார்? இதுதான் தமிழின பற்றா? இலங்கைத் தமிழர்களுக்கு காட்டும் நேர்மையா?

ஈழத் தமிழர்கள் வாழ்வில் அமைதி பிறக்கவேண்டும், அவர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று மகிழ்ச்சியாக வாழவேண்டும், அதனை நான் பார்க்க வேண்டும் என்று உணர்ச்சி ததும்ப பேசிய முதலமைச்சர் கருணாநிதி, “சிறிலங்க இராணுவம் கடந்த 23 ஆண்டுக் காலத்தில் பெற்ற வெற்றிகளின் மூலம் வடக்கில் இயல்பு வாழ்வை நிலைநிறுத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது” என்று இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை விட்டாரே, அதற்கு என்ன பொருள் என்று கேட்டாரா? கேட்கவில்லையே ஏன்?

பிரணாப்பின் பயணத்தை அடுத்து தமிழ்நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்பை மத்திய அரசிற்கு எதிராக, அதனை தமிழர்களுக்கு சாதகமாக திருப்பாமல், ‘எனது ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது’ என்று கூறி, அதனை உள்ளூர் அரசியலாக்கி தமிழ்நாட்டு மக்களை திசை திருப்ப முயற்சித்தாரே?

ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனப் படுகொலையை கட்டவிழத்துவிட்டு, ஒவ்வொரு நாளும் அப்பாவி மக்களைக் கொன்று குவித்துவரும் சிறிலங்க இனவாத அரசுடன் நல்லுறவு கொண்டு, அதற்கு ‘எல்லா உதவிகளையும்’ மத்திய அரசு செய்து வருவதை அறிந்தும் அறியாதவர் போல் நடித்துக் கொண்டு, அதற்கு ஆதரவான ஒரு அரசியல் போக்கை தமிழ்நாட்டில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசு.

ஈழத் தமிழருக்கு எதிரான சிறிலங்க அரசிற்கு எல்லா வித‌த்திலும் இந்திய அரசு உதவுகிறது என்பது உலகிற்கே தெரிந்த ரகசியம். ஆனால் அந்த அரசு தமிழர்களின் நலம் காணும் அரசு என்று எந்த மக்களுக்கு உணர்த்த விரும்புகிறது தமிழக அரசு?

எங்களுக்கு இந்திய அரசு முழுமையாக உதவுகிறது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது என்று சிறிலங்க அமைச்சர்களே கூறிவருகின்றனர். காயம்பட்ட சிங்கள இராணுவ வீரர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை இந்தியா செய்யும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்திலேயே சிறிலங்க அமைச்சர் நிர்மல் சிறிபால டே கூறினார். அதனை மத்திய அரசு மறுக்கவில்லையே?

அதன்பிறகுதானே, வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்களை அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்? அது நடந்ததா? அதற்கு மத்திய அரசிடம் இருந்து ஏதாவது பதில் வந்ததா?

அரை நூற்றாண்டுக் காலமாக ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் அரசிற்கு, தமிழ்நாட்டு மீனவர்களை நாளும் வதைக்கும் சிறிலங்க அரசிற்கு ‘அனைத்து உதவிகளையும்’ செய்துவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்துக் கொண்டு, அதற்கு தலைமையேற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்வதில் ‘பாகீரத பிரயர்த்தனம்’ செய்துவரும் தி.மு.க. கட்சியும், அரசும் இதற்கு மேலும் ஈழ மக்கள் நலன் பற்றி பேசாமல் இருந்தாலே அதை கூட ஒரு நேர்மையாக தமிழக மக்கள் கருதுவார்கள்.

இன்றைக்கு ஈழ மக்களின் பிரச்சனை உலக நாடுகளின் கவனத்திற்கு (மத்திய அரசு உதவாமலேயே) முழுமையாக கொண்டு செல்லப்பட்டுவிட்டது. அமெரிக்க செனட்டின் அயலுறவு துணைக் குழு சிறிலங்க அரசு நடத்திவரும் இனப்படுகொலை குறித்து விசாரிக்கிறது. அது விடுதலைப் புலிகளை ஒழிப்பதில்தான் கவனம் செலுத்துகிறதே தவிர, தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று குற்றம் சாற்றியுள்ளது.

ஆனால், தமிழினத்தின் நலனையே மூச்சாகக் கொண்டு செயல்பட்டுவரும் தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, காயம்பட்ட சிறிலங்க இராணுவத்தினருக்கு உதவ மருத்துவ உதவி செய்கிறது. அந்த இராணுவத்தின் காட்டுமிராண்டித் தாக்குதலில் காயமடைந்த மக்களுக்கு உணவு, மருந்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுக்கிறது.

மொத்தத்தில் இலங்கையில் சிறிலங்க அரசு நடத்திவரும் இனப் படுகொலைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முழுமையாக ஒத்துழைப்பு நல்கி வருகிறது. அதனை சிறிலங்க அரசும் அமைச்சர்களும் பல முறை வெளிப்படையாகக் கூறி தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுவிட்டனர்.

ஆனால், இதெல்லாம் ஏதோ வேறு ஒரு கிரகத்தில் நடப்பது போல, இந்தச் செய்திகளையெல்லாம் அறியாதவர்கள் போல, போரை நிறுத்த உலக நாடுகளுடன் இணைந்து மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறுவதை அவர்கள் கட்சியினரே கூட நம்ப மாட்டார்கள். அதனால்தான் தங்கள் இயலாமையை வெளிப்படுத்த இரண்டு தி.மு.க. தொண்டர்கள் தீக்குளித்து தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர்.

எனவே இதற்கு மேலும் ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் தமிழக அரசு நாடகம் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இனமானம், இனப்பற்று என்றெல்லாம் பேசுவதையும் விட்டுவிட வேண்டும். எது தங்களது அரசியல் வசதிக்கு ஒத்துவரவில்லையோ அதனை கொச்சைபடுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.