ஜீ.எஸ்.பீ வரிச் சலுகை இல்லாமல் போகுமானால் அந்த பாதிப்பை எதிர்கொள்ள இலங்கைக்கு முடியும்

ஜீ.எஸ்.பீ பிளஸ் நிவாரணம் தொடர்ந்தும் செயற்பாட்டில் இருப்பது சிறந்தது என்ற போதிலும், ஏதேவொரு காரணத்தினால் அந்த வரிச் சலுகை இல்லாமல் போகுமானால் அந்த பாதிப்பை எதிர்கொள்ள இலங்கைக்கு முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

srilanka-governmentநேற்று மத்திய வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜீ.எஸ்.பீ பிளஸ் வரிச் சலுகை தொடர்பாக புதிய நிலைமைகளைத் தெளிவுபடுத்துவதற்காக இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
ஜீ.எஸ்.பீ பிளஸ் வரிச் சலுகை எமக்கு அவசியமாகும். எனினும், ஜீ.எஸ்.பீ பிளஸ் வரிச் சலுகை இல்லாமல் இலங்கையின் தொழிற்துறை முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். ஏற்கனவே பல்தரப்பு வர்த்தக உடன்படிக்கை இரத்தானது போல் ஜீ.எஸ்.பீ பிளஸ் வரிச் சலுகை இன்றியும் இலங்கை முன்நோக்கிப் பயணிக்க முடியும்.
 
ஜீ.எஸ்.பீ பிளஸ் இல்லாமல்போவது உலகத்தின் இறுதி முடிவல்ல எனவும் கப்ரால் கூறியுள்ளார். 2008 நவம்பர் 2009 ஜனவரி ஆகிய இடைப்பட்ட காலத்தில் யூரோ மற்றும் பிரித்தானிய பவுண் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது ரூபாயின் மதிப்பு குறைவடைந்த போதிலும் இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் ஐரோப்பிய சந்தையில் போட்டியுடன் கூடிய வகையில் வர்த்தக நடவடிக்கைகளில் நிலைத்திருந்தனர்.
 
ஜீ.எஸ்.பீ பிளஸ் வரிச் சலுகை இல்லாமல் போவதன் மூலம் விதிக்கப்படும் ஏழு வீத வரி இழப்பு இலங்கையின் ஏற்றுமதி துறையில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தாது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். ஏற்றுமதியாளர்களுக்கு இந்த நிலைமையின் கீழ் இலங்கை ரூபாவின் அடிப்படையில் நட்டம் ஏற்படாது. வருடத்தில் கிடைக்கும் அந்நியச் செலாவணியில் 78 மில்லியன் யூரோவிற்கும் குறைவான தொகையே அந்நிய செலாவணியாகக் கிடைக்கிறது எனவும் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.