சண்டே லீடர் ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலை ஐந்து ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது

சண்டே லீடர் ஆசிரியர் பெரட்றிக்கா ஜான்ஸ் அதன் செய்தி ஆசிரியர் முன்ஸ் முஜ்தாக் ஆகியோருக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலை ஐந்து ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பு  வன்மையாகக் கண்டித்துள்ளது.

5mediaorginizationஇந்தக் கொலை அச்சுறுத்தல் ஒரே மாதிரியான இரண்டு கடிதங்களின் மூலம் விடுக்கப்பட்டுள்ளது. இக்கொலை அச்சுறுத்தல் கடிதங்கள் ஒக்ரோபர் 21ஆம் திகதி தபாலிடப்பட்டு ஒக்.22ஆம் திகதி கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்தச் சூழ்நிலையில் இந்த இரண்டு ஊடகவியலாளர்களதும் பாதுகாப்பை; உறுதிப்படுத்த வேண்டியது பொலிஸாரினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும் என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

2009 ஜனவரி 8ஆம் திகதி சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பதாக இவ்வாறான இரண்டு கொலை அச்சுறுத்தல்  கடிதங்கள் அவருக்கும் அனுப்பப்பட்டிருந்தன என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.  இவ்வடிப்படையில் இந்த அச்சுறுத்தல் கடிதங்கள் புறக்கணிக்கக்கூடியவையல்ல என்றும் அவை குறித்துக் காட்டியுள்ளன. இக்கடிதங்களை சாதாரணமானவை என்றோ அல்லது கணக்கில் கொள்ளத் தேவையற்றவை என்றோ எடுத்துக் கொள்ள முடியாது என்று தாங்கள் கருதுவதாகவும் அக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த பலவருடங்களாக நாட்டில் ஊடகவியலாளர்கள் மீதும் ஊடகங்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபாயகரமான அச்சுறுத்தல் போக்கின் அடுத்த கட்டமே இது எனத் தாங்கள் கருதுவதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

மாறுபட்ட அபிப்பிராயங்களையும், வேறுபட்ட பார்வைக் கோணங்களையும் வேறுபட்ட செய்திகளையும் வாசகர்களுக்கு வழங்கும் ஊடகவியலாளர்களை இலக்காகக் கொண்டு தொடர்ந்து அச்சுறுத்தல்களையும் பயமுறுத்தல்களையும் மேற்கொள்வதானது ஜனநாயக ரீதியில் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு இன்னமும் இலங்கையில் இடமில்லை என்பதையே புலப்படுத்தும்.

ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இந்த ஜனநாயகபூர்வமற்ற நடவடிக்கைகள்,   கடந்து 30 வருடங்களுக்கு மேலாக இடம் பெற்று வந்த போர் முடிவடைந்துள்ள நிலையில் அமைதியானதும் ஜனநாயகபூர்வமானதுமான ஒரு இலங்கை பற்றிய மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஊறு விளைவிப்பதாக அமையும்.

எனவே ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் தங்களுடைய பணியை அச்சமும் அச்சுறுத்தப்படலும் இன்றி சுதந்திரமாகவும் நியாயமாகவும் செய்வதற்கான சூழலை ஜனாதிபதியும் அரசாங்கமும் உறுதிப்படுத்த  வேண்டும் என்று  தாம் வேண்டிக் கொள்வதாகவும் அவ்ஐந்து ஊடகங்களின்; கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.