ஆசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம் மிகவும் அவசியம்

ஆசியாவில் அமெரிக்கா தன்னைத் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என சிங்கபூரின் முன்னாள் பிரதமரும் தற்போதைய மதியுரை அமைச்சருமான லீ குவான் இயூ வலியுறுத்தியுயள்ளார். இவ்வாறு செயற்படாது போனால், உலகளாவிய தலைமைத்துவத்தை அமெரிக்கா இழக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். வொஷிங்டனில் நடைபெற்ற ஆயுட்கால சாதனை விருது பெறும் நிகழ்ச்சியில்  லீ உரையாற்றும் போதே மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

american-flagஆசியாவில் சீனாவின் இராணுவ, பொருளாதார சக்தியைச் சமன்படுத்த அமெரிக்கா தன்னை ஆசியாவில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயமானது எனவும் லீ குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுக்குச் சென்றுள்ள லி குவான் யூ நேற்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்தித்தார்.
 
சீனாவில் மட்டுமின்றி கிழக்கு ஆசியாவிலும் இந்தியாவிலும் அமெரிக்கா தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் என்பதை உறுதிப்படுத்து வதற்காக மதியுரை அமைச்சர் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். ஆசியாவில் ஈடு இல்லாத சக்தியாக சீனா உருவாகும் நிலையில், இந்த பிராந்தியத்தில் ஒரு சமநிலையை அமெரிக்கா உருவாக்க வேண்டியிருக்கும் இன்னும் 20 முதல் 30 ஆண்டுகளில் ஜப்பான், இந்தியா உள்ளிட்ட இதர ஆசிய நாடுகள் அனைத்தும் இணைந்தாலும் ஈடுசெய்ய முடியாத அளவுக்குச் சீனாவின் ஆற்றல், பலம் அதிகரிக்கும்.
 
ஆகையால் அமெரிக்கா ஒரு சம நிலையைக் காணவேண்டிய நிலைமை ஏற்படும். எந்த ஒரு புதிய கிழக்கு ஆசியக் குழுமம் அரும்பினாலும் அதன் முக்கியமான பகுதியாக அமெரிக்கா இருக்க வேண்டும் எனவும் லீ குவான் யூ குறிப்பிட்டுள்ளார். சீனாவின் இராணுவ பலம் குறித்துப் கருத்து வெளியிட்டுள்ள திரு லீ, அந்த நாட்டின் 60 வது ஆண்டு தேசிய தினத்தின் போது, நவீன சீன தயாரிப்பு ஆயுதங்கள் அணிவகுத்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
 
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அடுத்த மாதம் 11 ஆம் திகதி தனது முதல் அதிகாரத்துவ ஆசியப் பயணத்தை மேற்கொள்ள உள்ளதுடன்,  சிங்கப்பூரில் நடைபெறும் ஏபெக் உச்ச நிலை மாநாட்டிலும் கலந்து கொள்ள உள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.