சரத் பொன்சேகாவை நாம் ஓரம் கட்டவில்லை – கோதபாய

கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை அரசாங்கம் ஓரம் கட்டியுள்ளதாக எதிர்க்கட்சிகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

raja-kothaவங்குரோத்து நிலையை அடைந்த சில அரசியல்வாதிகள் சரத் பொன்சேகா விவகாரத்தை பூதாகாரமாக உருவாக்கி அதன் மூலம் நாட்டை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கு படைவீரர்களை எதிர்க்கட்சிகள் பயன்படுத்த முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி பதவியை வழங்கியதன் மூலம் சரத் பொன்சேகாவின் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தப் பதவியை வகிப்பவர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் மிக முக்கிய பொறுப்புக்களை உடையவர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பாதுகாப்பு அமைச்சிற்கு ஒத்துழைப்பு வழங்குதல், இராணுவ தந்திரோபாயங்களை வகுத்தல், கொள்கை வகுத்தல் உள்ளிட்ட முக்கிய கடமைகளை கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஒப்புதலுடன் இந்தப் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பாதுகாப்பு படையினரைப் பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த சில சர்வதேச சக்திகளும் முனைப்பு காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இராணுவ வீரர்கள் அரசியலில் ஈடுபடுவதில் தவறில்லை எனினும், சீருடையில் இருக்கும் போது அரசியலில் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.