அகதிகள் அனைவரையும் மீளக்குடியேற்றிய பின்பே இரு தேர்தல்களையும் நடத்த வேண்டும்

தேர்தல் ஆணையாளரிடம் ஐ.தே.க. வலியுறுத்து… இல்லையேல் வடக்கில் வாக்குக்கொள்ளைதான் இடம்பெறும். வவுனியா அகதிமுகாம்களில் உள்ள வன்னி அகதிகள் அனைவரையும் மீளக் குடியமர்த்தி விட்டே ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த நடவடிக்கை எடுக்கவேண் டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

unp_logo_1அகதிகளைப் பார்ப்பதற்கு அரசு எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு அனுமதி மறுத்துள்ள நிலையில்  அகதிமுகாம்களுக்குள் வாக்குச் சாவடிகளை நிறுவித் தேர்தலை நடத்தினால் வன்னி மாவட்டத்தின் முழு வாக்குகளும் கொள்ளையடிக்கப்படும் என்றும் அக்கட்சி தேர்தல் ஆணையாளரிடம் இது தொடர்பாக ஐ.தே.கவின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான திஸ்ஸ அத்தநாயக்க கூறியவை வருமாறு:

எதிர்வரும் தேர்தல்கள் எவ்வாறு அமையவேண்டும். அவற்றை நீதியானதும் சுதந்திரமானதுமாக நடத்துவதற்கு எவ்வகையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பது பற்றி நாம் தேர்தல் ஆணையாளருடன் கலந்தாலோசித்தோம்.

அனைத்துத் தேர்தல்களிலும் அரசு, அரச வாகனங்கள், அரச ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்துகிறது. இத் தேர்தல்களிலும் அரசு நிச்சயம் அவ்வாறே செயற்படும். இதைத் தடுத்து நிறுத்த சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்தோம்.

தேர்தல் காலங்களில் இவ்வாறு அரச சொத்துகளைப் பாவிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாம் வழக்குத் தாக்கல் செய்யவும் தீர்மானித்துள்ளோம்.

முக்கியமாக வன்னி அகதிகள் மீளக்குடியமர்த்தப்படாத நிலையில்தான் தேர்தல்கள் நடக்கப் போகின்றன. அவர்களைப் பார்வையிடுவதற்கு எமக்கு அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த நிலையில் அங்கு சென்று எம்மால் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. அகதி முகாம்களுக்குள் யாருமே செல்ல முடியாத நிலையில் வாக்குச் சாவடிகளை அங்கு அமைத்தால் அரசு வாக்குக் கொள்ளையில் ஈடுபடும்.

 ஆகவே, இந்த அகதிகள் அனைவரையும் மீளக்குடியமர்த்திவிட்டுத்தான் இரு தேர்தல்களையும் நடத்தவேண்டும். இந்த விடயம் தொடர்பாக வவுனியா அரச அதிபரிடம் தகவல்களைத் திரட்டி வருவதாகத் தேர்தல் ஆணையாளர் எம்மிடம் தெரிவித்தார். அடுத்தது, எதிர்வரும் இரு தேர்தல்களையும் கண்காணிக்க கட்டாயம் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் தேர்தல் ஆணையாளரிடம் முன்வைத்தோம்.

நாம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தேர்தல் ஆணையாளர் எம்மிடம் உறுதியளித்தார்  என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.