ஜனாதிபதி மஹிந்தருக்கு எதிராக சர்வதேச சதி வலைப் பின்னல்

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்து, நசுக்கி, தென்னிலங்கை பௌத்த  சிங்கள மக்கள் மத்தியில் நவீன துட்டகைமுனுவாகத் திடீர் எனப் பேரெழுச்சி பெற்று, இலங்கைத் தீவின் அரசியல் வரலாற்றில் அசைக்க முடியாத பெரும் தலைவராக உயர்ந்து நின்ற மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் அடித்தளத்தில் திடீரென சிறிய இடறல்  பிசிறல்  தென்படுவது வெளிப்படை.

mahinda20121-06“புலி அழிப்பு சாதனை”யில் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் அணியில் அவருடன் தோளோடு தோள் கொடுத்து நின்ற முன்னாள் இராணுவத் தளபதியும், முப்படைகளின் தற் போதைய சிரேஷ்ட அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன் சேகா, எதிர்கால அரசியலில்  விரைவில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகக் களமிறங்குவார் என்ற தகவல்  செய்தி  அடிபடத் தொடங்கியதுமே, ஜனாதிபதி மஹிந்தரின் அரசியல் தளம் தடுமாறத் தொடங்கியிருப்பது கண்கூடு.

இது ஒன்றும் தனித்து உள்நாட்டு அரசியலின்  அல்லது இங்குள்ள தனி நபர்களின் விருப்பு, வெறுப்புகளால்  விளைந்த போக்கோ அம்சமோ அல்ல என்பதுதான் உண்மை.

சர்வதேச சதுரங்கக் காய் நகர்த்தல்களின் விளைவே இப்போது இப்படி வெளிப்படத் தொடங்கியிருப்பதாகத் தோன்றுகின்றது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் இனி எச்சமயத்திலும் நடத் தப்படலாம் என்ற நிலைமை தோன்றியதுமே இந்த அதிரடி கள நிலை மாற்றமும் தென்படத் தொடங்கியிருப்பது முக்கியமாகக் கவனிக்கத்தக்க அம்சமாகும்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா எதிரணியின் பொது வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று பல் வேறு ஊகங்கள் ஊடகங்களில் வெளிவந்தவண்ணம் இருந்தா லும், இந்த விவகாரங்களின் பின்னணியில் செயற்படும் அரூபக்கரங்களின்  சூத்திரதாரிகளின்  நோக்கமும், இலக்கும் இவ்விவகாரத்தில் முற்றிலும் வேறானது என்றே விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மஹிந்த ராஜபக்ஷ  ரணில் விக்கிரமசிங்க  சரத் பொன் சேகா என்ற முக்கூட்டுப் போட்டி நிலையை உருவாக்குவதன் மூலம் மஹிந்தராஜபக்ஷவை மண்கவ்வவைக்கும் இரகசியத் திட்டம் கட்டவிழ்வதாகவே பலரும் அபிப்பிராயப்படு கின்றார்கள்.

விடுதலைப் புலிகள் மீதான இராணுவ வெற்றி காரணமாக, இலங்கைத் தீவில் அசைக்கமுடியாத அரசியல் செல்வாக்குடன் தமது பதவியில் வலுவாகக் காலூன்ற முயலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதேசமயம், நாட்டில் தமது அரசியல் செல் வாக்கும், அதிகாரமும் மேலும் உறுதிப்பட்டு, ஸ்திரப்படும் நம்பிக்கை காரணமாக சர்வதேச அரசியலைக் கையாளும் விட யங்களில் சில முக்கிய தரப்புகளுக்கு விரும்பாத தடத்தில் எதேச்சையாகப் பயணிக்க முயல்கின்றார் என்பது எல்லோ ருக்கும் தெரிந்ததுதான். அதுதான் அவருக்கு இன்று எதிர் வினையாக வந்திருப்பதாகப் பலரும் சந்தேகிக்கின்றனர்.

அமெரிக்கா உட்பட்ட மேற்குலகை வெறுப்புற வைக்கும் விதத்தில் வெளிப்படையாகச் செயற்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுபக்கத்தில் அமெரிக்க எதிர்ப்பு அணிகளோடு குசலம் விசாரிக்கின்றார். லிபியத் தலைவர் கேணல் கடாபி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோளில் உரிமை யுடன் கைபோடுகின்றார். வெனிசூலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸை, அதிபர் மஹிந்த ராஜபக்ஷ ஆரத் தழுவுகின்றார். ஈரான் அதிபர் அஹமது நிஜாத்தைக் கட்டியணைக்கின்றார். சீனா வுக்கு இலங்கையில் செங்கம்பளம் விரிக்கின்றார் அதிபர் ராஜபக்ஷ.

விடுதலைப் புலிகளுக்கு சவால்விட்டு அதில் வெற்றி கண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதே பாணியில் சர்வதேச வல்லாதிக்க சக்திகளுக்கும் சவால்விட்டுத் தேறலாம் என்று கருதிக்கொண்டு, அச்சக்திகளைத் தூக்கி எறிந்து  புறந்தள்ளி  உதாசீனப்படுத்தி  இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல் வதானால் எள்ளி நகையாடி  நடந்துகொள்ள முற்பட்ட போதே இப்போக்கு எத்தகைய விபரீதத்திலும் கொண்டுபோய் விட லாம் என்ற ஓர் ஊகம் பலராலும் வெளியிடப்பட்டே வந்தது.

தனக்கு எதிராக சவால் விடும் சக்திகள் பல நாடுகளிலும் தோன்றும் போது இந்த உலக வல்லாதிக்கத் தரப்புகள் எப்படி நடந்துகொள்கின்றன, எவ்வாறு பின்னணியில் மறைந்திருந்து சூத்திரதாரிகளாக இயங்கி, பல அரசுகளையும் அரசுத் தலை மைகளையும் மண் கவ்வ வைத்திருக்கின்றன என்பதற்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றின் பட்டறிவுகள் எமக்குச் சான்று பகர்கின்றன.

அதே நிலைமைதான்  சர்வதேச சதுரங்க விளையாட்டுத்தான்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான காய்நகர்த்தல் பின்னணியில் இருந்தபடி கட்டவிழ்கி ன்றன என்பது இலகுவாக ஊகிக்கத்தக்கதே.

ஏற்கனவே இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்திருந்த நிலையில் இங்கு மிக மோசமாக  மிகக் கொடூரமாக  மிகக் குரூரமாக  இடம்பெற்றவை எனக் கூறப்படும் “யுத்தக் குற்றங் கள்”பற்றிய சர்ச்சை இன்று சர்வதேச மட்டத்தில்  மேற்குல கால்  மிக அழுத்தமாகக் கிளப்பப்பட்டு வருகின்றது.

இந்த இலங்கைத் தீவில் யுத்தக் குற்றங்கள் புரிந்தவர்க ளுக்கு  சட்டத்தின் பிடியிலிருந்தும், தண்டனையிலிருந்தும் விசேட விலக்கு அளிக்கும் சிறப்புரிமை  காப்புரிமை  வழங் கப்பட்டுள்ளது என்று குறை கூறி அதற்கு எதிராகத் தீவிரமாகக் குரல்கொடுத்து வருகின்றது மேற்குலகு. இது, தீவிரக் குரல் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய விடயம் தான். அதில் தப்பில்லை.

ஆனால் அதேசமயம், சில பிரகிருதிகளை இலங்கையின் அரசுத் தலைமைக்கு எதிராகத் திருப்ப வைப்பதற்காக, சர்வ தேச யுத்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களுக்கு மட்டும் விசேட விலக்கு அளிக்கப்படும் என்ற சிறப்புரிமையை, இலங்கை அரசியல் விவகாரத்தில் அந்தப் பிரகிருதிகளை முன்தள்ளிக்கொண்டு வருவதற்கான சலுகையாக   உறுதி மொழியாக  மேற்குலகு முன்வைக்குமானால்  அது பெரும் தப்பு என்று சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மேற்குலகின் சுயலாபம் கருதிய முரண்பாடாக  குளறுபடியாக  இப்போக்கு அர்த்தப்படக்கூடியது.

இலங்கை யுத்தத்தினால் பேரழிவுகளையும், போரழிவுகளையும் சந்தித்துத் துவண்டு கிடக்கும் தமிழினத்தைப் பொறுத்தவரை, “ஊர் இரண்டு பட்டால் யாருக்கோ கொண் டாட்டம்” என்று வளரும்  நிலைமையைப் பார்த்திருப்பதைத் தவிர, அவர்களுக்கு வேறு  என்ன  மார்க்கம்  உண்டு?

– உதயன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.