கோத்தபாயவுக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து சாட்சியமளிக்கும்படி பொன்சேகாவிடம் அமெரிக்கா கோரிக்கை

பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து சாட்சியமளிக்கும்படி ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் தன்னிடம் கோரியுள்ளதாக  முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வாஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார் என ராஜதந்திர வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

usaflagஇரண்டு ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் தொலைபேசியூடாகத் தொர்பு கொண்டு மேற்படி கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணைகளை நடத்தக் கூடுமெனச் செய்திகள் வெளியாகியிருந்தன.
 
தனிப்பட்ட காரணத்திற்காக தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை நடத்தக் கூடுமென எதிர்வு கூறப்பட்டிருந்தது.
 
அமெரிக்க உள்துறைப் பாதுகாப்பு பிரிவுடன் ஜெனரல் சரத் பொன்சேகா சந்திப்பொன்றை நடாத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இச்சந்திப்பு அமெரிக்காவின் ஓக்லொஹாமாவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி நடைபெறவிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
 
ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவின் கிறீன் கார்ட் வதிவிட உரிமையைப் பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை அமெரிக்க அதிகாரிகளின் விசாரணைகளை தொடர்பில் சட்ட ஆலோசனைகளை வழங்குமாறு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளின் சட்ட ஆலோசகரான பெரட் பீல்டிங்கிடம் சரத் பொன்சேகா உதவி கோரியுள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய, ரொபர்ட் பிளேக்கிடம் ஒத்துழைப்பு கோரியுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதனை தீர்த்துக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிளேக்கிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அமெரிக்காவின் வதிவிட உரிமையைப் பெற்றுக் கொண்ட நபர் ஒருவருக்கு இராஜதந்திர பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
 
எனவே சரத் பொன்சேகாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டால் ராஜதந்திர ரீதியிலான பாதுகாப்பினை அவர் பெற்றுக் கொள்ள முடியாது என அமெரிக்க சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அமெரிக்கப் பிரஜைகளும், குடியுரிமை பெற்றுக் கொண்டவர்களும் அமெரிக்க சட்ட திட்டங்களுக்கு அடி பணிந்து செயற்பட வேண்டியது அவசியமானதெனத் தெரிவிக்கப்படுகிறது.
 
புலிகளுடனான யுத்தத்தின் போது இராணுச் சட்டங்களை மீறிச் செயற்பட வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதாகவும், வெள்ளைக் கொடியுடன் சரணடைய முயற்சித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும்  ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த ஜூலை மாதம் 18ம் திகதி அம்பலாங்கொடையில் நடைபெற்ற விழாவொன்றில் குறிப்பிட்டுள்ளதாக அமெரிக்க காங்கிரஸிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.