மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள துணுக்காய் பிரதேசத்திற்கு புலம்பெயர்ந்தோர் குழு பிரதிநிதிகள் நாளை விஜயம்

புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் சார்பிலான குழுவின் பிரதிநிதிகள் நாளை முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெற்று வருகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகளை இந்தக் குழுவினர் நேரடியாகப் பார்வையிடுவதுடன், மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள பொதுமக்களையும் சந்தித்து அவர்களின் நிலைமைகள் குறித்து கேட்டறிந்து கொள்வார்கள் என தெரிகின்றது.

nerudal-tamil-news1வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவரும் ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமாகிய பசில் ராஜபக்சவின் பணிப்புரைக்கமைய இந்தப் பிரதிநிதிகள் துணுக்காய் பிரதேசத்திற்கு அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிவில் நிர்வாகச் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைவிட வன்னிப்பிரதேசத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே முதன்முறையாக மீள்குடியமர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போரினால் முழுமையாக அழிந்து ஆளரவமற்ற பிரதேசமாகவுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் குடியேறுகின்ற மக்கள் தமது வாழ்க்கையை சூனியத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

இந்த நிலையில் இங்கு நடைபெற்று வருகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து நேரில் கண்டறிவதற்காக புலம்பெயர்ந்தோர் குழுவின் பிரதிநிதிகள் வருகை தருவது முக்கியத்துவம் மிக்க ஒரு விடயமாகவே கருதப்படுகின்றது.

மீள்குடியேற்றம் நடைபெற்று வருகின்ற துணுக்காய் பிரதேசத்திற்கு நேற்று உலக வங்கி அதிகாரிகள் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்டறிந்துள்ளார்கள்.

மீள்குடியேற்றத்திற்காக நடைபெற்று வருகின்ற உட்கட்டமைப்பு நிர்மாண பணிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் என்பன குறித்து, உலக வங்கி அதிகாரிகள் திருப்தி தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஏனைய மாவட்டங்களில் இடம்பெறுகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகளிலும் பார்க்க முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதாகவும் அவர்கள் அதிகாரிகளிடம் கருத்து வெளியிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.