இலங்கையில் தமிழ் மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் – மகிந்த

இலங்கையில் தமிழ் மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என திருப்பதியில் சாமி கும்பிட்ட பின் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜகபக்ஷ தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ நேபாள நாட்டில் ஆன்மிக சுற்றுப்பயணம் செய்து விட்டு நேற்று பகல் 2.20 மணிக்கு தனி விமானம் மூலம் திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு சென்றடைந்தார் அவருடன் மனைவி மற்றும் குடும்பத்தினர், பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 80 பேர் சென்றுள்ளனர். ராஜபக்ஷ திருப்பதி வருகையையொட்டி இங்குள்ள தமிழர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.

mahiஇதனால் ஆந்திர அரசு சார்பில் பலத்த  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ரேணிகுண்டா விமான நிலையத்திலும் ஏராளமான காவற்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் ராஜபக்ஷ செல்லும் வழி நெடுகிலும் துப்பாக்கி ஏந்திய காவற்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ரேணிகுண்டாவில் இருந்து கார் மூலம் ராஜபக்ஷ, பகல் 3.20 மணிக்கு திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கு அவர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். இலங்கையில் விடுதலைப்புலிகள் மீது போர் ஓய்ந்ததற்கு பிறகு முதன்முறையாக ராஜபக்ஷ இந்தியா வந்ததால் அவருக்கு எதிர்ப்பு இருக்கும் என கருதி திருமலையிலும் அதிரடிப்படை காவற்துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். விருந்தினர் மாளிகையில் சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் மாலை 4.50 மணிக்கு ராஜபக்ஷ, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் சென்றார். அங்கு அவர் பயபக்தியுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பிறகு கோவிலுக்குள் உள்ள உண்டியலில் அவர் காணிக்கை செலுத்தினார். கோவிலுக்குள் உள்ள ரங்கநாயகி மண்டபத்தில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
 
ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு மாலை 5.20 மணிக்கு இலங்கை அதிபர் ராஜபகஷ வெளியே வந்த போது அவரை ஊடகவியலாளர்கள் சந்தித்தனர். அதன் போது கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ஷ, கடந்த ஆண்டு நான் திருப்பதி கோவிலுக்கு வந்த போது இலங்கையில் விடுதலைப்புலிகள் பிரச்சினை ஓய வேண்டும், மக்கள் அமைதியாக வாழ வேண்டும், அதற்கு ஏழுமலையான் அருள்புரிய வேண்டும் என வேண்டினேன். அதேபோல இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதான போர் ஓய்ந்து விட்டது. கும்பிட்ட தெய்வம் எங்களுக்கு கருணை காட்டி விட்டது. அதனால் திரும்பவும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்தேன். பயபக்தியுடன் சாமி கும்பிட்டேன். தற்போது இலங்கையில் தமிழ் மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். அதன்பின்னர் அவர் திருமலையில் இருந்து கார் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.