நிலக்கண்ணி வெடி அகற்றுதல் தொடர்பிலான அரசாங்கத்தின் கூற்றுக்களில் உண்மையில்லை

நிக்கண்ணி வெடி அகற்றுதல் தொடர்பிலான அரசாங்கத்தின் கூற்றுக்களில் உண்மையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
 
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் செய்து வரும் பிரச்சாரம் வெறும் வார்த்தைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

sureshகுறித்த இரண்டு மாவட்டங்களில் எந்தவொரு பிரதேசத்திலும் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
குறித்த பிரதேசங்களுக்கு செல்லக் கூடாது என சர்வதேச நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளை மேற்கொள்ள முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இந்திய நிலக்கண்ணி வெடி அகற்றும் பணியாளர்கள் கூட குறித்த பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாரியளவு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்ததாகவும், இவை தொடர்பான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுவிடும் என்ற காரணத்தினால் அரசாங்கம் சில வேளைகளில் சர்வதேச நிறுவனங்களை குறித்த பிரதேசத்திற்கு அனுப்பத் தயக்கம் காட்டி வரக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதேவேளை, நிலக்கண்ணி வெடி அகற்றும்கள் நடைபெற்று வருவதாகவும் அதனை ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதங்களிலோ பூர்த்தி செய்ய முடியாது என அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
 
இடம்பெயர் முகாம் மக்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை பலரும் வெளியிட்டு வருகின்ற போதிலும் அவர்களுக்கான பூரண நிவாரணங்களையும் அரசாங்கம் வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சரியான முறையில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் இடம்பெயர் மக்கள் மீண்டும் ஆயுதமேந்தக் கூடிய சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.