ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் இருவர் தற்கொலை முயற்சி

tower0ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று முழக்கமிட்டபடியே செல்போன் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர் கை உடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல நெல்லை மாவட்டத்தி்ல் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் கிராமத்தின் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி முகாம் செயலாளராக இருப்பவர் தீனதயாளன்.

21 வயதான தீனதயாளன், இன்று காலை 7 மணியளவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டபடியே ஆலப்பாக்கத்தில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் செல்போன்  கோபுரம் மீது ஏறியிருக்கிறார்.

சுமார் 100 மீட்டர் உயரம் கொண்ட அந்த கோபுரத்தின் பெரும்பகுதியை கடந்த நிலையில் ஊரில் உள்ள பொதுமக்கள் ஓடி வந்து அவரின் தற்கொலை முயற்சியை கைவிடும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

தீனதயாளனின் நண்பர்களும் அவரை கீழே இறங்கி வரும்படி கூறியிருக்கிறார்கள். சிலர் அவரைக் காப்பாற்ற அந்த கோபுரத்தின் மீது ஏறியிருக்கிறார்கள்.

அதைப் பார்த்த தீனதயாளன், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், புலிகளுக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பியபடியே கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்.

இதில் தீனதயாளனின் வலது கை உடைந்துவிட்டதாக அவரின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர். பலத்த காயமடைந்த தீனதயாளன் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

நெல்லையில் தீக்குளிக்க முயன்றவர் கைது

அதேபோல, நெல்லை டவுண் பாட்டபத்தை சேர்ந்தவர் நடராஜன் என்ற கருணாநிதி. இவர் கடந்த சில ஆண்டுகளாக குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவர் தமிழ் மீது பற்றுள்ளவர். இந்நிலையில் இன்று காலை டவுண் பொலிஸ் நிலையம் முன்பு தன் மீது மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு இலங்கை தமிழர்கள் வாழ்க, சிங்கள அதிபர் ராஜபக்ச ஓழிக, இலங்கை தமிழர்கள் கொன்று குவிப்பதை வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசு ஓழிக என்று கோஷம் போட்டவாறு தீக்குச்சியை கொளுத்தி தீ வைக்க முயன்றார்.

ஆனால் பொலிஸார் பாய்ந்து சென்று அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் குண்டுகட்டாக தூக்கி கொண்டு  பொலிஸ் நிலையம்  வந்தனர். அங்கு அவரைக் கைது செய்தனர்.

மாநகர துணை கமிஷனர் ஜெயசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.